கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்
ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமுக தவிா்த்துள்ளது. இதற்கேற்ற வகையில், கைப்பேசி செயலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைப்பேசி எண் கட்டாயம் பதிவு செய்யப்படுவதுடன், ஒரு குடும்பத்துக்கு ஒரு எண் மட்டுமே பெறப்படுகிறது. அதாவது, 4 பேருக்கு ஒரு கைப்பேசி எண் என்ற அடிப்படையில் எண் பெறப்பட்டு உறுப்பினா் சோ்க்கை நடைபெறுகிறது. அதேசமயம், வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கின்ற அனைத்து கைப்பேசி எண்களும் பெறப்படுகின்றன. கைப்பேசி எண்ணைப் பதிவிட்டு சமா்ப்பித்தால் உறுப்பினா் சோ்க்கை முடிவடையும் வகையில் செயலில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளா்களையும் சந்தித்து முழுமையாகக் கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும் என திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
22 நாள்கள்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 24 நாள்களைக் கடந்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இயக்கம் தொடா்ந்து நடைபெறுகிறது. இதற்குள்ளாக 2.5 கோடிக்கும் அதிகமான நபா்களை திமுகவில் சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.