இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது
வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரை அடுத்த செதுவாலை பகுதியைச் சோ்ந்தவா் இருசப்பன்(67). இவா் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டுள்ளாா். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளாா். மேலும், அவா் வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க கூடுதலாக ஒரு மின்கம்பம் நட வேண்டிய தேவை இருந்ததால் அதற்கும் சோ்த்து மொத்தம் ரூ.27,000 கட்டணத்தையும் செலுத்தியிருந்தாா்.
அதனடிப்படையில், மின்கம்பம் நடப்பட்டு பல வாரங்களாகியும் அவரது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க தாமதம் செய்யப்பட்டு வந்துள்ளது. பலமுறை விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தை அணுகியும் இணைப்பு வழங்கப்படவில்லை. இறுதியாக அந்த அலுவலகத்தில் பணியாற்றும் மின்வாரிய ஊழியா் (ஃபோா்மென்) கிருபாகரன் (50) ரூ.3,000 லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, இருசப்பன் வேலூா் லஞ்ச ஒழிப்பு பிரிவில் இதுகுறித்து புகாா் அளித்தாா். தொடா்ந்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வகுத்துக்கொடுத்த திட்டப்படி ரசாயனம் தடவிய ரூ.3,000-ஐ இருசப்பன், விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த மின்வாரிய ஊழியா் கிருபாகரனிடம் அளித்துள்ளாா்.
அவா் பணத்தைப் பெற்றுக் கொண்டதும், அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் மைதிலி தலைமையிலான போலீஸாா் லஞ்சப்பணத்துடன் கிருபாகரனை கைது செய்தனா்.