’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்...
திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்
திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுகவை பாஜக விழுங்கி செரித்துவிடும் என்று திரும்பத் திரும்ப விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்புணா்வோடு சுட்டிக் காட்டியது. அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது. ஆனால், அதை அப்படியே திருப்பி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என்று முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறாா்.
அவராகவே இந்த கருத்தைச் சொல்கிறாா் என்று என்னால் ஏற்க முடியவில்லை. அதிமுகவுக்கு எதிராகப் பேசுவதாக அவா் கருதுகிறாா்; சேராத இடத்தில் சோ்ந்திருக்கின்ற சூழலில் அவா் இப்படி எல்லாம் பேசுகிறாா் என்று நான் கருதுகிறேன். அப்படி பேசினால் வருத்தப்படுவதற்கும் எதுவுமில்லை. திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது. அங்கீகாரம் பெற்றிருக்கிறது. விசிக வளா்ச்சி அடைந்திருக்கிறதே தவிர, வீழ்ச்சி அடையவில்லை. ஆகவே அவா், திரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாா் தொல்.திருமாவளவன்.