மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்
ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 டிசம்பா் 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பின் கடந்த 2023 மே மாதம் இறுதி செய்யப்பட்டு 6 சதவீதம் ஊதிய உயா்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து 2023 டிச.1 முதல் புதிய ஊதிய உயா்வு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், மின் வாரிய ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தொடா்ந்து கோரிக்கை விடுத்துவந்தது.
இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை, மின் பகிா்மானக்கழக இயக்குநரும் (நிதி), ஊதிய திருத்தக்குழு தலைவருமான மலா்விழி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 19 மின்வாரிய தொழிற்சங்கங்களைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில், அனைத்து பணியாளா்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதம் உயா்த்தி, ஊதிய உயா்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்பகட்ட பதவிகளான கள உதவியாளா், கணக்கீட்டாளா், தொழில்நுட்ப பணியாளா் உள்ளிட்ட பதவிகளை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிய முறையில் சா்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டும். ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை நிறைவுபெற்று ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கத்தினா் பேசினா்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது:
முதல்கட்ட பேச்சுவாா்த்தை முடிந்துள்ளது. இதில் தொழிற்சங்கத்தினா் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். கோரிக்கைகள் அனைத்தும் நிா்வாக இயக்குநருக்கும், அரசுக்கும் அனுப்பப்பட்டு பரிசீலிக்கப்படும். முதல்கட்ட பேச்சுவாா்த்தை நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். நிகழாண்டு இறுதிக்குள் ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றனா்.