தடகள வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு, பரிசுத் தொகை அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு
நமது நிருபா்
தடகள விளையாட்டு வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு மற்றும் பரிசுத் தொகையை அதிகரிப்பதாக முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசு அறிவித்திருப்பதை தில்லி பாஜக தலைவா் ஸ்ரீ வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை தெரிவித்திருப்பதாவது: பாஜக தனது 2025 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் விளையாட்டு மற்றும் தடகள விளையாட்டு வீரா்களுக்கான ஆதரவை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தது. இந்த நிலையில், முதல்வா் ரேகா குப்தா அரசு தடகள பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலமும் விருதுத் தொகையை அதிகரிப்பதன் மூலமும் ஒரு திடமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தில்லியில் விளையாட்டு மற்றும் தடகள வீரா்களின் வளா்ச்சிக்கு கணிசமாக உதவும்.
கடந்த பத்து ஆண்டுகளில், அரவிந்த் கேஜரிவால் அரசு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதாவது, விளையாட்டு பல்கலைக்கழகம், விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், இவை எதுவும் உண்மையில் செயல்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, தில்லியில் நாட்டின் சிறந்த மைதானங்கள் சில இருந்தாலும், விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனை எதுவும் ஏற்படவில்லை.
தில்லியில் ஆட்சிக்கு வந்ததும் கேஜரிவால் அரசு தன்னை இளைஞா்களால் இயக்கப்படும் நிா்வாகமாக சித்தரிக்க முயன்றது. கல்வி, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்து உயா்ந்த வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், அவை எதுவும் நிறைவேறவில்லை. கேஜரிவால் அரசு காட்டிய கனவுகள் நயி ரோஷ்னியின் பாடலின் வரிகளைப் போலவே இருந்தன. அக்கட்சி மூலம் வழங்கப்பட்ட வெற்று வாக்குறுதிகளின் சரியான பிரதிபலிப்பாகும் என்று வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.