மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
1 ரூபாய்கூட செலவில்லை... `உயிர் கரைசல்' நீங்களே தயார் செய்யலாம்... விவசாயி கண்டுபிடித்த இடுபொருள்...
இயற்கை விவசாயத்தின் முதன்மையான நோக்கம்… ரசாயன நச்சுத்தன்மை இல்லாத ஆரோக்கியமான உணவு உற்பத்தி மற்றும் தற்சார்புடன் கூடிய குறைவான உற்பத்தி செலவு. தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இடுபொருள்களில் பெரும்பாலானவை, நன்கு பலன் கொடுக்கக் கூடியவையாகவும், குறைந்த செலவு கொண்டவையாகவும் உள்ளன. இந்நிலையில்தான் மேலும் குறைந்த செலவில், அதிக வீரியத்தன்மை கொண்ட ஓர் இடுபொருளை கண்டுபிடித்து, அதற்கு உயிர் கரைசல் எனப் பெயர் சூட்டியுள்ளார், நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி.
கோவை, வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம், சத்தியமூர்த்தியின் கண்டுபிடிப்பான உயிர் கரைசலை அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தி, அதில் அடங்கியுள்ள சத்துகள் குறித்து பரிசோதனை அறிக்கை அளித்துள்ளது. சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலோடு உயிர் கரைசல் தயார் செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் பலர், அதன் மகத்துவம் குறித்து நம்பிக்கையோடு சொல்வது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலைப்பொழுதில், விவசாயி சத்தியமூர்த்தியை சந்திக்கச் சென்றோம். திருமருகலில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது இவருடைய பண்ணை. நெல் அறுவடை செய்யப்பட்ட நிலத்தை, மறு சாகுபடிக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சத்தியமூர்த்தி, நம்மை கண்டதும் இன்முகத்தோடு வரவேற்று, தன்னைப் பற்றிய தகவல்களையும், விவசாய அனுபவங்களையும் மிகுந்த உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள தொடங்கினார்.

“இதுதான் எங்களோட பூர்வீக கிராமம். இப்ப திருமருகல்ல வசிச்சுக்கிட்டு இருக்கோம். விவசாயம்தான் எங்களோட முதன்மையான வாழ்வாதாரம். தினமும் பண்ணைக்கு வந்துடுவேன். இதோட மொத்த பரப்பு 5 ஏக்கர். பல வருஷங்களா ரசாயன விவசாயம் தான் செஞ்சுகிட்டு இருந்தேன்.
2004-ம் வருஷம், நம்மாழ்வார் ஐயாவோட அறிமுகம் ஏற்பட்ட பிறகு, அவரோட வழிகாட்டுதலோடு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இரண்டு கிலோ தூயமல்லி விதைநெல்ல என்கிட்ட கொடுத்து, ‘இதை சாகுபடி பண்ணி, மற்ற விவசாயிகள்கிட்ட பரவலாக்கம் செய்’னு நம்மாழ்வார் ஐயா சொன்னார். அவர் சொன்ன மாதிரியே செஞ்சேன். கிட்டத்தட்ட 10 மூட்டை நெல் உற்பத்தி பண்ணி, திருத்துறைப்பூண்டி நெல் திருவிழாவுல, அவர் முன்னிலையில பலருக்கும் பகிர்ந்து கொடுத்தேன். ரொம்பவே சந்தோஷப்பட்டார். வருஷத்துக்கு ஒரு போகம் நெல் சாகுபடி செய்றது வழக்கம். பாரம்பர்ய நெல் ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள்… இந்த இரண்டையுமே சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். சம்பா நெல் அறுவடைக்குப் பிறகு, உளுந்து பயிர் செய்வேன்” எனத் தெரிவித்தவர், உயிர் கரைசல் கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“இயற்கை விவசாயம் செய்ய தொடங்கினதுல இருந்து 2022-ம் வருஷம் வரைக்கும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், ஜீவாமிர்தம் உள்ளிட்ட இடுபொருள்கள்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். தமிழ்நாட்டுல உள்ள இயற்கை விவசாயிகள்ல பெரும்பாலானவங்க, இந்த இடுபொருள்களைப் பயன்படுத்திதான் நல்ல விளைச்சல் எடுத்துக்கிட்டு இருக்காங்க. எனக்கும் நல்ல பலன் கிடைச்சது. ஆனா, இந்த மூணு இடுபொருள்களுக்குமே வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தி ஆகணும். அதை கடையிலதான் விவசாயிகள் வாங்குறாங்க. அதுக்கு கணிசமான தொகையை செலவு செய்றாங்க. இயற்கை விவசாயம்ங்கறது, இயன்ற வரைக்கும் செலவு குறைந்ததாகவும், தற்சார்பானதாகவும் இருக்கணும். அதுக்கேத்தபடி ஓர் இடுபொருளை கண்டுபிடிக்கணும்னு விரும்பினேன்.

வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பயறு மாவு உள்ளிட்ட பொருள்கள் கலந்து தயார் செய்யக்கூடிய இயற்கை இடுபொருள்கள்ல கார்போஹைட்ரேட் அதிகமா இருக்கும். அவை, நொதித்தல் முறையில தயார் செய்யக்கூடிய இடுபொருள்கள். அதுக்கு மாற்றாக, புரதச்சத்து நிறைஞ்ச ஒரு பொருளை பயன்படுத்தி, பயிர் வளர்ச்சி ஊக்கி கண்டுபிடிக்கணும்… அது குறைந்த செலவுல, எளிமையா தயார் செய்யக்கூடிய இடுபொருளா இருக்கணும்னு விரும்பினேன். தாவர புரதத்தை விடவும், விலங்கின புரதத்துல வீரியம் அதிகம். அதுல அடங்கியுள்ள 9 வகையான அமினோ அமிலங்களால், அதிக எண்ணிக்கையில நுண்ணுயிர்கள் பெருக்கமடையும்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. அதனால கோழி முட்டையை முதன்மை மூலப்பொருளா பயன்படுத்தி இயற்கை இடுபொருள் தயார் செய்யும் முயற்சியில இறங்கினேன்.
மாட்டுச் சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர் ஒயிட்லகான் கோழி முட்டைகள் 2… இதை எல்லாம் ஒண்ணா கலந்து, 6 நாள்கள் வரை வச்சிருந்து, தினமும் கலக்கினேன். 7-ம் நாள் உயிர் கரைசல் தயாராகிடுச்சு. அதை, சோதனை முயற்சியாக, எங்க வீட்டுத்தோட்டத்துல உள்ள கத்திரி, வெண்டை, தக்காளி, கொத்தவரை செடிகளுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி வீதம் உயிர் கரைசல் கலந்து தெளிச்சேன். அடுத்த ஒரு வாரத்துல நல்ல மாற்றம் தெரிஞ்சது. செடிகள் நல்லா பச்சைப் பசேல்னு இருந்துச்சு.
உளுந்து செடிகளைக் காப்பாற்றிய உயிர் கரைசல்…
காய்கறிச் செடிகள்ல நல்ல மாற்றம் தெரிஞ்சதுனால, அடுத்தகட்ட சோதனை முயற்சியா, உளுந்து சாகுபடிக்கு இதைப் பயன்படுத்திப் பார்க்க தீர்மானிச்சேன். குறிப்பா, விதைநேர்த்திக்கு இது எந்தளவுக்கு பலன் கொடுக்கும்னு தெரிஞ்சுக்க விரும்பினேன். 40 லிட்டர் தண்ணீர்ல 2 லிட்டர் உயிர் கரைசல் கலந்து, அதுல 25 கிலோ விதை உளுந்தை, 4 மணிநேரம் ஊற வச்சு 3.5 ஏக்கர் பரப்புல தெளிச்சேன். 30-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி வீதம் உயிர் கரைசல் கலந்து, ஒரு ஏக்கருக்கு 10 டேங்க் வீதம் தெளிச்சேன். பயிர், நல்லா செழிப்பா விளைஞ்சு வந்துச்சு.

எதிர்பாராதவிதமா 45-ம் நாள் கனமழை கொட்டித் தீர்த்துடுச்சு. எங்க ஊரே, வெள்ளக் காடா காட்சி அளிச்சது. நாலு நாள்கள் கழிச்சுதான், என்னோட வயல்ல தண்ணீர் வடிஞ்சது. உளுந்து செடிகள்ல கடுமையான சேதம். இனிமே பிழைச்சு வர வாய்ப்பே இல்லை… அவ்வளவுதான்னு நினைச்சேன். ஆனா, ஒரு வாரம் கழிச்சு பார்த்தப்ப, வயல் முழுக்க பரவலா, மஞ்சள் நிறத்துல பூக்கள் பூத்திருந்துச்சு. அடுத்த சில நாள்கள்ல பிஞ்சுகள் உருவாகி காய்க்க ஆரம்பிச்சிடுச்சு. விதைப்பிலிருந்து 90-ம் நாள் உளுந்து அறுவடைக்கு வந்துச்சு. 3.5 ஏக்கர்ல 4 குவிண்டால் மகசூல் கிடைச்சது. உளுந்து நல்லா திரட்சியாவும் இருந்துச்சு. ஊர்மக்கள் ஆச்சர்யப்பட்டு போயிட்டாங்க. காரணம், அந்த வருஷம், தைப் பட்டத்துல உளுந்து சாகுபடி செஞ்ச விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம். கோடை மழையால் ஏற்பட்ட பாதிப்பால், கொஞ்சம்கூட மகசூல் கிடைக்கல. விதைகளை உயிர் கரைசல்ல விதைநேர்த்தி செஞ்சதுனாலயும், இலைவழி ஊட்டமா உயிர் கரைசல் தெளிச்சதுனாலயும்தான், என் வயல்ல அதிக பாதிப்பில்ல.
நெல், பருத்தி…
எங்க ஊர் விவசாயிகள் சிலர், ரொம்ப ஆர்வமா, உயிர் கரைசல் தயார் செய்யும் முறையை என்கிட்ட தெரிஞ்சுகிட்டு… நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு பயன் படுத்திக்கிட்டு இருக்காங்க. நிலத்துல பயிர் சாகுபடி செய்றதுக்கு முன்னாடி, இதை அடியுரமா பயன்படுத்தினா, அருமையா பலன் கொடுக்கும். பாசனநீர்ல ஒரு ஏக்கருக்கு 20 லிட்டர் வீதம் உயிர் கரைசல் கலந்து, தண்ணீர் பாய்ச்சிட்டு, உழவு ஓட்டினா, நுண்ணுயிர்கள் பெருக்கம் சிறப்பா நடந்து, மண்ணு நல்லா வளமடையும். இலைவழி ஊட்டமாகவும் இதைப் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீர்ல 5 லிட்டர் உயிர் கரைசல் கலந்து தெளிக்கலாம் 10 - 15 நாள்கள் இடைவெளியில இரு முறை உயிர் கரைசல் தெளிச்சா, பயிர்கள் நல்லா ஊக்கமா வளரும். பூச்சி, நோய்த்தாக்குதல்களும் இருக்காது. நெல், உளுந்து, நிலக்கடலை, காய்கறிகள் உள்ளிட்ட எல்லா வகையான பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

ஒரு விவசாயி, தன்னோட வீட்ல… ஒரு மாடும், நாலஞ்சு நாட்டுக்கோழிகளும் வளர்த்தா போதும். உயிர் கரைசல் தயார் செய்ய, ஒரு பைசாகூட செலவு செய்ய வேண்டியதில்ல. 20 லிட்டர் கரைசல் தயார் செய்ய 10 கிலோ மாட்டுச் சாணம், 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 3 முட்டைகள் தேவைப்படும். நாட்டுக்கோழி முட்டைக்கு வாய்ப்பில்லைனா, ஒயிட் லகான் முட்டைகள் பயன்படுத்திக்கலாம். 2 முட்டைகள் போதும். கடையில ஒயிட்லகான் முட்டைகள் வாங்குகுறதா இருந்தால், அதிகபட்சம் 15 ரூபாய்தான் செலவாகும்.
நெல், உளுந்து, நிலக்கடலை, பருத்தி, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் கரைசல் தெளிச்சா, பயிர்கள் வளர்வதோடு மட்டுமல்லாமல், பூச்சி, நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். பூக்களின் எண்ணிக்கை அதிகரிச்சு, கூடுதல் மகசூலும் கிடைக்கும். இந்தக் கரைசல்ல பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்குறதுனால, பயிர்கள் கீழே சாயும் தன்மை குறையும். திரட்சியான நெல்மணிகள் கிடைக்கும். பருத்தி செடிகளுக்கு இலைவழி ஊட்டமா இதைக் கொடுத்தால், மாவுப் பூச்சிகள் மற்றும் அசுவினிப் பூச்சிகள் கட்டுப்படுறதா எங்க ஊர் விவசாயிகள் சொல்றாங்க.
உயிர் கரைசல்ல அடங்கியுள்ள சத்துகள் குறித்து அறிவியல் பூர்வமா ஆய்வு பண்ணி, யதார்த்த நிலையை தெரிஞ்சுக்குறதுக்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துல உள்ள நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு, கரைசலை அனுப்பினேன். அங்க ஆய்வு செஞ்சு தெரிவிச்ச ஆய்வு முடிகள், ஆச்சர்யப்பட வச்சது. 19 வகையான நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துகள் அடங்கியிருக்குனு உறுதி செய்யப்பட்டிருக்கு. 0.63% தழைச்சத்து உள்ளது. இதனால் பயிர்கள் பச்சை பசேல்னு செழித்து வளரும். 0.51% மணிச்சத்து உள்ளது. இதனால் பயிர்கள் திடமாக வளரும். 0.87% சாம்பல் சத்தும் 5.63% கரிம சத்தும் உள்ளது. கால்சியம், மெக்னீசியம், சல்பர், சோடியம் இரும்பு, ஜிங்க், காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துகளும் அடங்கியிருக்குனு துல்லியமான அளவுகளோடு அறிக்கை வழங்கப்பட்டிருக்கு. நம்ம விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு இந்த உயிர் கரைசலைப் பயன்படுத்தி பலன் அடையணும்ங்கறதுதான் என்னோட முக்கிய நோக்கம்” எனத் தெரிவித்தார்.
தொடர்புக்கு, சத்தியமூர்த்தி,
செல்போன்: 94430 60963
உயிர் கரைசல் தயார் செய்யும் முறை...
தேவையான பொருள்கள்...
மாட்டுச் சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், நாட்டுக்கோழி முட்டைகள் 3 (ஒயிட் லகான் முட்டைகள் பயன்படுத்துவதாக இருந்தால் 2 தேவைப்படும்).
தயார் செய்யும் முறை…
முட்டைகளை உடைத்து, அதில் உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை, மாட்டு சிறுநீரில் ஊற்ற வேண்டும். முட்டைகளின் ஓடுகளை உடைத்து, அதையும் மாட்டு சிறுநீரில் போட்டு, ஒரு குச்சியால் நன்கு கலக்க வேண்டும். இதைத் தொடர்ந்து மாட்டுச் சாணத்தையும் அக்கரைசலில் போட்டு கலக்கி மூடி வைக்க வேண்டும். தினந்தோறும் காலை அல்லது மாலை வேளையில்… வலது புறத்திலிருந்து இடது புறமாக 30 தடவையும், இடது புறத்திலிருந்து வலது புறமாக 30 தடவையும் கலக்க வேண்டும். 7-வது நாள் சுமார் 20 லிட்டர் உயிர் கரைசல் தயார் நிலையில் இருக்கும். இதை 4 மாதங்கள் வரை வைத்திருந்து தேவைக்கேற்ப, பயிர் சாகுபடிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் கரைசலில் நொதிக்கும் தன்மை கிடையாது.
பயிர் வளர்ச்சியூக்கியாக செயல்படும்!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரும், உழவியல் துறை பேராசிரியருமான முனைவர் கிருஷ்ணனிடம் பேசியபோது, “விவசாயி சத்தியமூர்த்தி அனுப்பியிருந்த உயிர் கரைசலில் அடங்கியுள்ள சத்துகள் குறித்து பரிசோதனை செய்து தெரிவித்தோம். இதைப் பயிர்களுக்குத் தாராளமாகப் பயன்படுத்தலாம். இது பயிர் வளர்ச்சி யூக்கியாக செயல்படும். ஆனால், இதை மட்டுமே கொடுத்து முழுமையாக பயிர் விளைச்சல் எடுத்துவிட முடியாது. கூடுதலாக மற்ற இடுபொருள்களையும் பயன்படுத்தினால் முழுமையான, நல்ல விளைச்சல் எடுக்கலாம்” என்றார்.
விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
விவசாயி சத்தியமூர்த்தி அறிமுகம் செய்துள்ள உயிர் கரைசலை இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் சீயாத்தமங்கை கிராமத்தைச் சேர்ந்த பருத்தி விவசாயி செல்வராசு, “உயிர் கரைசல் பயன்படுத்த ஆரம்பிச்சதுல இருந்து ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிக்கான செலவு மிச்சமாகியிருக்கு. 2 வருஷத்துக்கு முன்னாடி, என்னோட பருத்திச் செடிகள்ல காய் உதிரும் தன்மை அதிகமா இருக்கும். ஆனா, இப்ப அந்த பிரச்னையே இல்லை. காய்ப்புழு, மாவுப் பூச்சிகளின் தாக்குதலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கு” என்றார்.
குருவாடி கிராமத்தைச் சேர்ந்த நெல் விவசாயி செல்வம், “நெல் சாகுபடியில அடியுரமாகவும், இலைவழி ஊட்டமாகவும் உயிர் கரைசல் பயன் படுத்திக்கிட்டு இருக்கேன். பயிர்கள்ல நிலையான பசுமை தன்மை கிடைக்குது. திரட்சியான நெல்மணிகள் கிடைக்குது. பூச்சி, நோய்த்தாக்குதல்கள் பெருமளவு குறைஞ்சிருக்கு” என்றார்.

ஆரம்பத்தில் 4 முட்டைகள்... அதிக துர்நாற்றம்...
“உயிர் கரைசலை வெற்றிகரமா உருவாக்க… கிட்டத்தட்ட 4 வருஷம் தொடர் முயற்சிகள் மேற்கொண்டேன். புரதத்துக்காக… தேங்காய் எண்ணெய், கடலைப் புண்ணாக்கு உள்ளிட்டவற்றை தனித்தனியா பயன்படுத்தி கரைசல் தயார் பண்ணி, பயிர்களுக்கு தெளிச்சுப் பார்த்தேன், அடியுரமா கொடுத்தேன். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கல.
அதுக்குப் பிறகுதான் விலங்கின புரதம் பயன்படுத்த முடிவு பண்ணி, கோழி முட்டையைத் தேர்வு பண்ணினேன். 10 கிலோ மாட்டுச் சாணம், 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரோடு, 4 ஒயிட்லகான் முட்டைகளின் மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்றினேன். துர்நாற்றம் அதிகமா இருந்துச்சு. இதை விவசாயிகள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. அதுமட்டுமல்லாம, கரைசல்ல புரதத்தின் அளவு அதிகமா இருந்தால், நுண்ணுயிர்கள் உறக்க நிலைக்குப் போறதுக்கான வாய்ப்பு அதிகம். அதனால் அடுத்த முறை, 3 முட்டைகள் மட்டும் பயன்படுத்தினேன். துர்நாற்றம் ஓரளவுக்குதான் குறைஞ்சது. அடுத்தகட்ட முயற்சியா 2 முட்டைகள் மட்டும் பயன்படுத்தி பார்த்தேன். கொஞ்சம்கூட துர்நாற்றம் இல்லை. பயிர்களுக்குத் தெளிச்சேன் நல்ல பலன் கிடைச்சது.
அந்தக் கரைசலை ஆய்வு பண்ணிப் பார்த்தப்ப, கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துகள் போதுமான அளவு இருந்துச்சு. ஆனால், பாஸ்பரஸ் சத்து குறைவா இருந்துச்சு. அதாவது, 0.08 சதவிகிதம்தான் பாஸ்பரஸ் சத்து இருந்துச்சு. முட்டைகளோட ஓடுகளையும் கரைசல்ல கலந்தால், பாஸ்பரஸ் சத்தின் அளவை அதிகப்படுத்த முடியும்னு தெரிஞ்சுகிட்டு, அதை நடைமுறைப்படுத்தினேன். கரைசலை ஆய்வு பண்ணி பார்த்தப்ப, பாஸ்பரஸ் சத்தின் அளவு 0.51 சதவிகிதம் இருந்துச்சு. அதாவது, முட்டை ஓடுகளையும் சேர்த்து கரைசல் தயார் செஞ்சதால், 43 சதவிகிதம் பாஸ்பரஸ் சத்து அதிகரிச்சது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துகளோட அளவும் கூடுதலா இருந்துச்சு” என்கிறார் சத்தியமூர்த்தி.