விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
செண்பகம் முதல் சில்வர் ஓக் வரை; 25,000 மரக்கன்றுகள் தயார்! - வனத்துறையிடம் இலவசமாக பெறுவது எப்படி?
தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையைப் போன்றே வனத்துறை தரப்பிலும் நாற்றாங்கால்களை அமைத்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்கின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கும் அரிய வகை சோலை மரங்கள் முதல் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக நடவு செய்யப்படும் வெளிநாட்டு மரங்கள் வரை உற்பத்தி செய்து தேவைப்படுவோருக்கு வழங்கி வருகின்றனர்.

மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் குறிப்பிட்ட சில வகை மரங்களை அழியாமல் பாதுகாக்கவும் இந்த முயற்சி எடுக்கப்படுவதால் இலவசமாகவே மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், ஊட்டி வி.சி குடியிருப்பு அருகில் உள்ள வனத்துறை நாற்றங்காலில் மரக்கன்றுகளை இலவசமாக பெற வனத்துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள நீலகிரி வனக்கோட்ட வனத்துறையினர், " ஊட்டி வடக்கு வனச்சரகம் சார்பில் விவசாயிகளுக்கு நேரடியாக பலன் தரும் மரக்கன்றுகள் வனத்துறை மூலம் இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி 20 ஆயிரம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும் , சோலை மரக்கன்றுகளான நாவல், விக்கி, கோலி, கிலிஞ்சி, செண்பகம், மேப்பியா ஆகியவிற்றில் 5 ஆயிரம் மரக்கன்றுகளும் தயாராக உள்ளன.

இவற்றைப் பெற சம்மந்தப்பட்ட நபர்களின் ஆதார் அட்டை, பட்டா, சிட்டா ஆகியவற்றின் நகல்கள் மட்டும் போதுமானது. மரக்கன்றுகள் தேவைப்படுவோர் வனவர் யோகேஸ்வரனின் 6380783251 என்கிற தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஊட்டி ஃபிங்கர்போஸ்ட் அருகில் உள்ள வி.சி குடியிருப்பு பகுதியில் வடக்கு வனச்சரக வளாகம் அமைந்துள்ளது. அங்கும் அணுகலாம்" என தெரிவித்துள்ளனர்.