திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!
திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி காலை உணவு திட்டத்தில் உணவு சமைப்பதற்காக பள்ளிக்கு சமையலர்கள் வந்துள்ளனர். அப்போது சமையலறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மளிகை பொருட்கள், பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர்கள் தலைமை ஆசிரியர் பொறுப்பு மற்றும் அந்த ஊராட்சியை சேர்ந்த சிலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பள்ளிக்கு வந்து இதை பார்த்த ஊரை சேர்ந்த சிலர் அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வந்த போலீஸார் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் இதை செய்திருக்கலாம் என விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பள்ளியின் பின்புறம் உள்ள புதரில் உடும்பு பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர். அதில் கீரிப்பிள்ளை மாட்டியுள்ளது. பள்ளிக்குள் சென்று சமையலறையில் இருந்த பொருட்களை எடுத்து கீரிப்பிள்ளையை சமைத்துள்ளனர். பின்னர் மது குடித்து விட்டு பள்ளியிலேயே அதை சாப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போதை தலைக்கேறியவர்கள் பொருள்களை சேதப்படுத்தியுள்ளனர். இதில் மாணவர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்னீர் தொட்டியில் (சின்டெக்ஸ் டேங்க்) மலத்தை கலந்து விட்டு சென்றனர்.

இந்த சம்பவம் வெளியே கசிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேங்கைவயல் போல் காரியாங்குடியில் இந்த கொடுஞ் செயலை செய்த மிருகத்தனம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கொந்தளித்தனர். சந்தேகத்தின் பேரில் பள்ளியை ஒட்டியுள்ள சகோதரர்களான விஜயராஜ், விமல்ராஜ் மற்றும் இவர்களது நண்பர்களான செந்தில், காளிதாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் விஜயராஜின் சகோதரர் திருவாரூர் டி.எஸ்.பி ஆபீஸில் போலீஸ் ரைட்டராக பணி புரிகிறார்.
சம்பவம் நடந்து நான்கு நாள்கள் ஆன நிலையிலும் இது குறித்து விசாரித்த திருவாரூர் தாலுகா போலீஸ் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது சர்ச்சையானது. இது தொடர்பாக பல அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தன. மலம் கலக்கப்பட்ட தண்ணீர் டேங்கையும், இடத்தையும் மாற்றி விட்டு முதல் மாடியில் புதிய தண்ணீர் டேங்க் வைத்தனர். டேங்கை மாற்றினால் போதுமா, குற்றவாளிகளை பிடிக்க வேண்டாமா எனவும் குரல் எழுப்பினர் அப்பகுதியினர்.

இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளிக்கு சென்று குற்றவாளிகளைப் பிடிக்காதது தொடர்பாக பேசினர். நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். பல மட்டத்தில் இருந்து போலீஸாருக்கு அழுத்தம் வந்தது. இந்தநிலையில், ஏற்கனவே தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தவர்களில் விஜயராஜ், செந்தில், காளிதாஸ் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர். ``மது குடித்து விட்டு கீரிப்பிள்ளை சமைத்து சாப்பிட்டோம். போதை ஏறியதால் இதை செய்து விட்டோம்" என அவர் கூறியதாக, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.