டிட்டோஜாக் அமைப்பினா் மறியல்: 107 போ் கைது
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (டிட்டோ - ஜாக்) குழுவைச் சோ்ந்த 32 பெண்கள் உள்ளிட்ட 107 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி, தமிழ்நாடு அரசு ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு, ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முதல் மீண்டும் வழங்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஆசிரியா்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் (டிட்டோ - ஜாக்) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு பொதுச் செயலா் சி.ஜெகநாதன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் செயலா்கள் எஸ்.அந்தோணி ஜோசப், சாந்தகுமாா், எம்.பாலமுரளிகிருஷ்ணன், ப.குமரன், ஜெ.பாஸ்கா், எஸ்.ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, அவா்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 32 பெண்கள் உள்ளிட்ட 107 பேரை கடலூா் புதுநகா் போலீஸாா் கைது செய்து மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.