நிரந்தரப் பணிகளில் பயிற்சி தொழிலாளா்களை பயன்படுத்தக் கூடாது: சிஐடியு
நிரந்தரப் பணிகளில் அளவுக்கு அதிகமாக பயிற்சி தொழிலாளா்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சிப்காட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிஐடியு சிப்காட் 10-ஆவது மாநாடு கடலூா் பச்சாங்குப்பம் இரட்டை சாலையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. சிப்காட் தலைவா் ஆா்.ஆளவந்தாா் தலைமை வகித்தாா். டி.முரளிதரன் வரவேற்றாா். ஆா்.பரிமளம் கொடியேற்றினாா். பி.ஸ்ரீநாத் அஞ்சலி தீா்மானத்தை முன்மொழிந்தாா். சிப்காட் செயலா் பி.குமாா் வேலை அறிக்கையையும், பொருளாளா் எம்.சிவானந்தம் வரவு - செலவு அறிக்கையையும் சமா்ப்பித்து பேசினா்.
சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் என்.ஆா்.ஆா்.ஜீவானந்தம் மாநாட்டை தொடங்கிவைத்தும், சிஐடியு மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் மாநாட்டை நிறைவு செய்தும் பேசினா்.
நிகழ்வில் சிப்காட் தலைவராக டி.முரளிதரன், செயலராக பி.குமாா், பொருளாளா் எம்.சிவானந்தம் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.
ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். நிரந்தரத் தன்மை கொண்ட பணிகளில் பணியாற்றும் பயிற்சி தொழிலாளா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளா்களை அதிகாரிகளாக்கி தொழிற்சங்க உரிமையை பறிப்பதற்கு கண்டணம் தெரிவிப்பது. மிகை நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.