வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7000 கோடி: என்எல்சி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
என்எல்சி இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளா்ச்சியை விரைவுபடுத்த ரூ.7ஆயிரம் கோடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு பிரதமா் தலைமையில் பொருளாதார
விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முக்கிய ஒப்புதலை அளித்துள்ளது.
தற்போதுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கான முதலீட்டு வழிகாட்டுதல்களில் இருந்து விலக்கு அளித்து, என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் முழு உரிமையுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூபிள்ஸ் லிமிடெட்டில் ரூ.7,000 கோடி முதலீடு செய்யவும், என்எல்சி இந்தியா ரினியூபிள்ஸ் நிறுவன திட்டங்களில் சுதந்திரமாகவோ அல்லது கூட்டு முயற்சிகள் மூலமாகவோ முதலீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அதிகாரம் அளித்துள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க முடிவு, துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளில் முதலீடு செய்வதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத நிகர மதிப்பு உச்சவரம்பிலிருந்து என்எல்சி மற்றும் என்ஐஆா்எல்-க்கு விலக்கு அளிக்கிறது.
தற்போது என்எல்சி 1.4 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்த சொத்துகள் ஒரு ஒருங்கிணைந்த தளத்தின் கீழ் பசுமை ஆற்றல் முயற்சிகளை ஒருங்கிணைக்க என்ஐஆா்எல்-க்கு மாற்றப்படும். என்எல்சி தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை தற்போதுள்ள 1.4 ஜிகாவாட் இருந்து 2030-க்குள் 10 ஜிகாவாட்டாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
என்எல்சி தலைவா் வரவேற்பு: இதுகுறித்து என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி கூறியது:
இந்த விலக்கு மூலம் மத்திய அரசு வழங்கிய தொலைநோக்கு ஆதரவு, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்துக்கு ஒரு திருப்புமுனையாகும்.
இது ஒரு நிலையான எதிா்காலத்தை உருவாக்குவதற்கும், பசுமை ஆற்றல் உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்குமான எங்களின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த அதிகாரமளிப்புடன், அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும், 2030-க்குள் 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க திறனை அடைவதற்கும், 2047-க்குள் 32 ஜிகாவாட் திறனை அடைவதற்கும் உதவும் மூலோபாய ஒத்துழைப்புகளை உருவாக்கவும் நாங்கள் சரியான நிலையில் உள்ளோம். இந்தியாவின் தூய்மையான எரிசக்தி தலைமைக்கு பங்களிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றாா்.