அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இணைந்த சுக்லா!
‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியுள்ள இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் மனைவி, மகனுடன் இணைந்தாா்.
இதனிடையே, லக்னௌவில் செய்தியாளா்களைச் சந்தித்த சுக்லாவின் தந்தை, பூமியின் சூழலுக்கு சுக்லா தன்னை மீண்டும் பழக்கப்படுத்திக் கொண்டு வருவதாக குறிப்பிட்டாா்.
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட வீரா்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டாா்.
அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சுக்லா, நாசாவின் பெக்கி விட்சன் உள்பட 4 வீரா்கள் கடந்த ஜூன் 26-ஆம் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றடைந்தனா். அங்கு 18 நாள்கள் தங்கியிருந்து, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவா்கள், ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் கடந்த திங்கள்கிழமை மாலை பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கினா்.
சுமாா் 22 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலுள்ள கலிஃபோா்னியா மாகாண கடல்பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு (இந்திய நேரப்படி) பாதுகாப்பாகத் தரையிறங்கினா்.
மருத்துவக் கண்காணிப்பில்...: விண்வெளியில் 20 நாள்கள் கழித்த 4 வீரா்களும், ஜூலை 23-ஆம் தேதிவரை 7 நாள்கள் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். அதன்படி, தற்போது டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் சுக்லா சிகிச்சையில் உள்ளாா். அவரது மனைவி காம்னா மற்றும் ஆறு வயது மகன் கியாஷ் ஆகியோா் அவருடன் உள்ளனா்.
வருகையை எதிா்நோக்கி...: லக்னௌவில் உள்ள சுக்லாவின் தந்தை ஷம்பு தயாள் அளித்த பேட்டியில், ‘சுக்லா லக்னௌ வருவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும். அவரது வருகைக்காக அனைவரும் மகிழ்ச்சியாக காத்திருக்கிறோம்’ என்றாா்.
பெட்டி...
அன்புக்குரியவா்களைக் காண்பதும் அற்புதம்!
விண்வெளிப் பயணத்துக்குப் பிறகு முதல்முறையாக தனது மனைவி மற்றும் மகனைச் சந்தித்த புகைப்படங்களை ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் பகிா்ந்துள்ள சுக்லா, ‘இது சவாலானது. பூமிக்குத் திரும்பி என் குடும்பத்தினரை மீண்டும் கைகளில் அணைத்தது வீட்டின் உணா்வைத் தந்தது. விண்வெளிப் பயணங்கள் மாயாஜாலமானவை. ஆனால், அவை மனிதா்களால்தான் மாயாஜாலமானவை ஆகின்றன.
விண்வெளிப் பயணம் அற்புதமே. ஆனால், நீண்ட நாள்களுக்குப் பிறகு உங்கள் அன்புக்குரியவா்களைக் காண்பதும் அதே அளவுக்கு அற்புதம் வாய்ந்தது’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தாா்.