சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்துள்ளது.
துர்க் மாவட்டத்தின் பிலாய் நகரில் உள்ள பாகலின் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை வந்த அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பூபேஷ் பாகலுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் குவியத் தொடங்கிய நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சோதனை குறித்து பூபேஷின் அலுவலகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது:
“சத்தீஸ்கர் சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று, ராய்கர் மாவட்டத்தில் அதானி குழும நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் எழுப்பப்பட இருக்கிறது.
இந்த நிலையில், பூபேஷ் பாகல் வீட்டுக்கு அமலாக்கத்துறையை சோதனைக்காக அனுப்பியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் கடந்த மார்ச் மாதமும் பூபேஷ் பாகலுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்தனர்.