மேற்கு வங்கம்: ஐஐடி-காரக்பூர் விடுதியில் இருந்து மாணவரின் சடலம் மீட்பு
நாமக்கல் அருகே டிரெய்லர் லாரி கவிழ்ந்து பெண் பலி: மேலும் ஒருவர் படுகாயம்
நாமக்கல்: நாமக்கல் அருகே இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சுதா(50), மகள் சினேகா(32). ஆடி முதலாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கீரம்பூரில் உள்ள எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு காலை சுமார் 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சுதாவும், சினேகாவும் சென்று கொண்டிருந்தனர்.
நாமக்கல்-கரூர் சாலையில் வள்ளிபுரத்தில் கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சினேகா லாரி நிற்பதை கண்டு வலது புறமாக வாகனத்தை திருப்பிய போது, பின்னால் பெங்களூரில் இருந்து கரூர் நோக்கிச் செல்லும் இரும்புக் கம்பி லோடு வந்த டிரெய்லர் லாரி அவர்கள் மீது மோதாமல் இருக்க, அதன் ஓட்டுநர் லாரியை திருப்பியபோது, அங்கிருந்த சென்டர் மீடியன் தடுப்புச் சுவரில் மோதி லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.
அதன் பின்னால் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரியும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சினேகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சுதா பலத்த காயமடைந்தார்.
தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸார், சுதாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சினேகா உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.