கொல்ல சதி செய்ததாகக் குற்றச்சாட்டு! மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன் ஜாமீன்
கூட்டணி ஆட்சியா? தவெகவுடன் கூட்டணியா? - இபிஎஸ் பதில்!
தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா? அதிமுக தனித்து ஆட்சியா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய உள்துறை அமித் ஷா முதலில் கூறினாலும், தற்போது கூட்டணி ஆட்சியில் பாஜக பங்குபெறும் என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுடன் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான், அமித் ஷா சொல்வதே இறுதியானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'திமுகவை வீழ்த்தவே பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்' என்று தெரிவித்தார்.
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு. 'தேர்தல் உத்திகளை, தந்திரங்களை வெளியில் சொல்ல முடியாது' என்று கூறினார்.
ஒருவேளை கூட்டணிக்கு விஜய் இறங்கி வந்தால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
பாஜக அல்லது தவெக - யார் வலிமையான கூட்டணி? என்ற கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், 'பாஜக தேசிய கட்சி. பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வலிமை இருக்கிறது. எனவே கட்சிகளை ஒப்பிட முடியாது. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.
நாதக, தற்போது திமுக கூட்டணியில் உள்ள விசிக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, 'திமுக அரசை அகற்ற யார் எங்களுடன் கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது?' என்று தெரிவித்துள்ளார்.