10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ - ஜாக் அமைப்பினர் போராட்டம்!
திருவள்ளூர்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் 195 பேர் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 2-ஆவது நாளாக இன்று(ஜூலை 18) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 195 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பி.ராஜாஜி, எஸ். பாலசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் டி.முருகன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜே.ஜான், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது டிட்டோ-ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் க்ராஸ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ருக்மாங்கதன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், டிட்டோ - ஜாக் அமைப்பினரைச் சேர்ந்த 195 பேரை கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.
இதையும் படிக்க: செம்மணி: தோண்டியெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்! யார் இவர்கள்?