டிரம்ப் நியமித்த புதிய தூதருக்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்கள்! ஏன்?
அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்த மலேசியாவுக்கான, புதிய அமெரிக்க தூதருக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் அமெரிக்க தூதரகத்தின் வாசலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பன்முகக் கலாசாரம் மற்றும் பெரும்பான்மையான இஸ்லாமியர்களைக் கொண்ட மலேசியா நாட்டின், புதிய அமெரிக்க தூதராக வலதுசாரி விமர்சகரும், இஸ்ரேல் ஆதரவாளருமான நிக் ஆடம்ஸ் என்பவரை அதிபர் டிரம்ப், கடந்த ஒரு வாரம் முன்பு நியமணம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் இன்னும் தூதராக உறுதி செய்யப்படாதச் சூழலில், அவருக்கு எதிராக, மலேசியாவின் இளைஞர் அமைப்புகள் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிரே கையில் நிக் ஆடம்ஸ்-க்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மலேசியாவில் இனவெறியாளர்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பாளர்களுக்கு இடமில்லை எனக் கூறி, ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த, அமெரிக்க குடியுரிமைப் பெற்ற நிக் ஆடம்ஸ்-ன் நியமணத்தைத் திரும்பப் பெறுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இத்துடன், தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிக் ஆடம்ஸ், தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றார். மேலும், ஆல்ஃபா மேல், கிரேக்க கடவுளைப் போல் உருவாக்கப்பட்டவர், அதிபர் டிரம்ப்பின் விருப்பமான எழுத்தாளர் எனத் தன்னைத் தானே குறிப்பிட்டு பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேலுடன், மலேசியா இதுவரையில் எந்தவொரு ராஜதந்திர உறவுகளையும் கொண்டிருக்கவில்லை. மேலும், தொடர்ந்து காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக மலேசியா அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றது.
மலேசியா பொருள்களின் மீது அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவிகித வரிகளைப் பற்றி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் நிக் ஆடம்ஸ்-ன் நியமணம், பேச்சுவார்த்தைகளை மேலும் இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: டிரம்ப் அரியவகை நரம்பு நோயால் பாதிப்பு! வெள்ளை மாளிகை