Monica Belluci : 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'கூலி'.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திலிருந்து, அனிருத் இசையில் 'மோனிகா' பாடல் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் ஹார்டின்களைப் பெற்றிருக்கின்றன.

பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள இப்பாடலில், பிரபல இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சியைக் குறிப்பிடும் வரிகள் இடம்பெற்றுள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நானும் அனிருத்தும் மோனிகா பெல்லுச்சியின் தீவிர ரசிகர்கள்' என்பதையும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார்.
யார் இந்த மோனிகா பெல்லுச்சி? அவரது வாழ்க்கைக் கதை குறித்து இப்போது பார்ப்போமா...
இத்தாலியைச் சேர்ந்த மோனிகா பெல்லுச்சிக்கு, உலக சினிமாவின் சிறந்த நடிகைகளின் பட்டியலில் எப்போதும் நீக்கமற இடமொன்று இருக்கும். அந்தளவிற்கு அழுத்தமான நடிப்பை பல பன்முக கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
1964-ம் ஆண்டு இத்தாலியின் சிட்டா டி காஸ்டெல்லோ என்ற ஊரில் பிறந்த அவர், ஆரம்பத்தில் மாடலாக தனது பயணத்தைத் தொடங்கினார்.
பாரிஸில் பணியாற்றியபோது, அவரது அழகும் ஆளுமையும் பலரையும் ஈர்த்தன.

1990-களில் மோனிகாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
பிறகு, வாய்ப்புகளை நோக்கி நகரத் தொடங்கிய அவர், இத்தாலிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
Malèna (2000), Irreversible (2002), The Passion of the Christ (2004), Spectre (2015) போன்ற பல முக்கியமான உலக சினிமாக்களில் அபரிமிதமான பங்காற்றியிருக்கிறார் மோனிகா.
Malèna (2000) என்ற இத்தாலிய திரைப்படம் மிக முக்கியமான உலக சினிமாவாகும். இத்திரைப்படம் இவருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றுத் தந்தது.
இந்தப் படத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் இவர் பிரபலமடையத் தொடங்கினார்.
தனது திறமையான நடிப்பாலும், வசீகரமான அழகாலும் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் மோனிகா பெல்லுச்சி. மோனிகா பெல்லுச்சி பல மொழிகளில் பயிற்சி பெற்றவர்.

இத்தாலிய, பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி, அந்த மொழிப் படங்களில் நடித்து வந்தார்.
தற்போது 60 வயதை எட்டிய பின்னரும், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார்.
தற்போது வெளியாகியுள்ள இந்த 'மோனிகா' பாடலை, மோனிகா பெல்லுச்சிக்கு ட்ரிபியூட் செலுத்தும் விதமாக அமைத்திருக்கிறது அனிருத் - லோகேஷ் கூட்டணி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...