செய்திகள் :

Superman Review: ஜேம்ஸ் கன்னின் ஆக்ஷன், எமோஷன், அரசியல் - DC Universe-இன் அசத்தலான புதிய ஆரம்பம்!

post image
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டிசி யூனிவர்ஸின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த சூப்பர்மேன். சூப்பர்மேனின் தோற்றக் கதையை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, கிளார்க் கென்ட் (டேவிட் கோரன்ஸ்வெட்) ஏற்கெனவே மூன்று ஆண்டுகளாக சூப்பர்மேனாகவும், டெய்லி பிளானட் ஊடகத்தில் நிருபராகவும் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் தொடங்குகிறது.

அவர் தனது கிரிப்டோனிய பாரம்பரியத்தையும், மனித குடும்பத்தால் வளர்க்கப்பட்ட அனுபவத்தையும் சமநிலைப்படுத்த முயல்கிறார். இதற்கிடையில், தொழில்நுட்ப மேதையும், வந்தேறிகளை வெறுக்கும் லெக்ஸ் லூத்தர் (நிக்கோலஸ் ஹோல்ட்), சூப்பர்மேனை அழிக்கத் திட்டமிடுகிறார். அதேநேரத்தில் ஜஹ்ரான்பூர் மற்றும் போரேவியா நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முயலும் சூப்பர்மேன், லெக்ஸின் சதித்திட்டங்களால் பல சவால்களை எதிர்கொள்கிறார். இதில், லோயிஸ் லேன் (ரேச்சல் ப்ரோஸ்நஹான்), கிரிப்டோ (சூப்பர்மேனின் நாய்), மற்றும் மிஸ்டர் டெரிஃபிக், க்ரீன் லேன்டர்ன், ஹாக்கேர்ள் போன்ற பிற சூப்பர் ஹீரோக்கள் அவருக்கு உதவுகின்றனர். இறுதியில் லெக்ஸ் லூத்தரின் சதித்திட்டத்தை சூப்பர்மேன் முறியடித்தாரா என்பதே படத்தின் கதை.

சூப்பர்மேன் விமர்சனம்

ஜாக் ஸ்னைடரின் கனமான ‘விண்வெளி நாயகா விடியல் வீரா’ என்று புனிதத்தன்மை கொண்ட சூப்பர்மேனுக்கு குட்பை சொல்லிவிட்டு, கிறிஸ்டோபர் ரீவ் காலத்து ரெட்ரோ உடையணிந்த சூப்பர்மேனையும் தவிர்த்துவிட்டு, நிறைகுறைகளை கொண்ட அனைத்து மனித உணர்ச்சிகளும் இருக்கும் புது சூப்பர்மேனை வானில் பறக்கவிட்டிருக்கிறார் ஜேம்ஸ் கன். மனிதத்தன்மை மிக்க, ஆனால் சண்டை செய்யும் அனைவரும் விரும்பத்தக்க ஒரு சூப்பர்ஹீரோ என்பது நவீன காலத்திற்கு ஏற்றவாறு செய்யப்பட்ட மறுவரையறையாக அனைத்து தரப்பினரையும் ரசிக்கவைக்கிறது. அதில் நகைச்சுவை, சென்டிமென்ட், பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள், உலக அரசியல் ஆகியவற்றை இணைத்து பார்வையாளர்களை மகிழ்வித்திருக்கிறார்.

டேவிட் கோரன்ஸ்வெட், சூப்பர்மேனாக சாகசங்களில் இளமை தோற்றத்தையும், மனிதநேயம் பேசும் இடத்தில் உணர்ச்சிபூர்வமான ஆழத்தையும் வழங்குகிறார். குறிப்பாக, தனது கிரிப்டான் உலகத்து பெற்றோர்கள் மனிதகுலத்தைக் காப்பதற்காக அனுப்பவில்லை, மாறாக வளர்ந்தவுடன் பூமியில் இருப்பவர்களை அடிமையாக மாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தனர் என்பதை அறியும் இடத்தில், அடையாள நெருக்கடியை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது கிளார்க் கென்ட் கதாபாத்திரமும், அழகான மனிதநேயத்துடன் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரேச்சல் ப்ரோஸ்நஹான், லோயிஸ் லேனாக புத்திசாலித்தனமான பெண்ணாக கதைக்கு ஒரு முக்கிய பங்களிப்பை அளிக்கிறார். இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி அட்டகாசம்! குறிப்பாக, சூப்பர்மேனின் குறையை சுட்டிக்காட்டும் உரையாடலாக நகரும் அந்த நேர்காணல் காட்சியை சிறப்பாக கையாண்டுள்ளார். ஜஸ்டிஸ் கேங்காக வரும் நாதன் ஃபிலியன் (கிரீன் லேன்டர்ன்), எடி கதேகி (மிஸ்டர் டெரிஃபிக்), இசபெல்லா மெர்செட் (ஹாக்கேர்ள்) ஆகியோர் கூடுதல் போனஸ்.

Superman Review

படம் எங்கெல்லாம் கொஞ்சம் ஓவர் சீரியஸாகச் செல்கிறதோ, அங்கெல்லாம் தாவி குதித்து வரும் கிரிப்டோ, சூப்பர்மேனின் விசுவாசமான நாயாக மட்டுமல்ல, நம் மனத்திலும் நகைச்சுவைக்கான வாலை ஆட்டிச் செல்கிறது. படத்திற்குத் தனித்துவமான நகைச்சுவையை கொடுத்துள்ள இந்த ஒற்றைக் காது மடங்கிய நாயின் விஷுவல் எஃபெக்ட்ஸ் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுகலகலது. சிறிது பிசகினாலும் பிளாஸ்டிக் ஆகக்கூடிய சவால்கள் இருந்தாலும், அதை லாகவமாகக் கையாண்டிருக்கிறார்கள். படத்தின் இதயமாக இருக்கக்கூடிய சூப்பர்மேனின் பறக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. ஜான் மர்ஃபியின் பின்னணி இசை, அந்த பிரமாண்ட தருணங்களை அடுத்தகட்டத்துக்கு உயர்த்துகிறது. இதற்கு நடுவே நாஸ்டால்ஜியைத் தூண்டும் ஜான் வில்லியம்ஸின் பழைய பின்னணி இசை கூடுதல் பிளஸ்.

படத்தின் ஆரம்ப சில நிமிடங்கள் சற்று மெதுவாகவும், உரையாடல் காட்சிகளால் நிரம்பியதாகவும் உள்ளன. இது முழுக்கமுழுக்க சாகச சண்டையை எதிர்பார்த்த ரசிகர்களின் பொறுமையை சோதிக்கலாம். ஆனால், அதற்குள் இருக்கும் காமெடி ஒன்லைனர்கள், புது சூப்பர்மேனின் அக உணர்வுகளைத் தெரிந்துகொள்வதற்கான உரையாடல்கள் சரியாக வேலை செய்வதால் குறையாகத் தெரியவில்லை. பூமியை அழிக்கத் துடிக்கும் வில்லன் என்ற பொதுவான நோக்கம் இல்லாமல், லெக்ஸ் லூத்தரின் கதாபாத்திரம், நிகழ்காலத்தில் கோமாளித்தனங்கள் செய்யும் டெக் முதலாளியையும், போரை ஆதரிக்கும் சர்வாதிகாரிகளையும் கேலி செய்திருப்பது சிறப்பான நகர்வு. இருவேறு உலகங்கள், பிளாக் ஹோல் போன்றவை சற்றே புரிந்துகொள்ள சிரமமாக இருந்தாலும், அங்கும் கிரிப்டோவின் காமெடி, வேற்றுகிரகவாசியின் மூலம் உணர்ச்சிகரமான காட்சிகள் வேலை செய்வதால் பெரிதாகப் பாதிப்பில்லை. பரபரப்பாக நகரும் படத்தின் இறுதி 20 நிமிடங்கள் விஷுவல் ட்ரீட். குட்டி கேமியோவாக வரும் சூப்பர்கேர்ள் வரும் காட்சியும் கலகல!

Superman Review
டிசி யூனிவர்ஸின் புதிய திசையை, சர்வாதிகாரத்துக்கு எதிராக நம்பிக்கையுடன் தொடங்கியிருக்கும் இந்த சூப்பர்மேன், நவீன கால அரசியல் பிரச்னைகளை பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமாகவும் பேசி வெற்றிக்கொடியை வானில் ஏந்திப் பறக்கிறான்.

Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் - இதுல டைனோசரே டயர்டாகிடும் பாஸ்!

பச்சை பசேலென உயர்ந்து நிற்கும் மரங்கள், அந்த உயரத்தைத் தாண்டி நிற்கும் ஓர் அழிந்து போன உருவம். மெதுவாக இலைகளைத் தின்று பூமி அதிர தன் இரு கால்களையும் தூக்கி நிற்க... "இது... இது ஒரு டைனோசர்!" என்று நாய... மேலும் பார்க்க

28 Years Later Review: ஐபோனில் எடுக்கப்பட்ட ஜோம்பி படம்; டேனி பாயிலின் பரீட்சார்த்த முயற்சி எப்படி?

வில்லிலிருந்து பாய்கிறது அம்பு. `ரேஜ்' (Rage) எனப்படும் வைரஸால் பாதிக்கப்பட்டு அதிவேக ஜோம்பி ஆகியிருக்கும் அந்த உயிரினத்தின் மீது அது பாய்கிறது. ரத்தம் தெறிக்க, கேமரா சட்டென அதிவேகத்தில் கோணத்தை மாற்ற... மேலும் பார்க்க

Johnny Depp: ஜாக் ஸ்பேரோவின் திடீர் என்ட்ரி; மகிழ்ச்சியில் ஆழ்ந்த குழந்தைகள்.. நெகிழவைத்த ஜானி டெப்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர் ஜானி டெப், ஸ்பெயினில் உள்ள நினோ ஜீசஸ் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று புற்றுநோய் மற்றும் பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இன்ப அத... மேலும் பார்க்க