'விஜய்யின் அம்மா கிறிஸ்தவர்; தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக-தான்!'- வெடிக்கும் அப்பாவு
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இதுசம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களை சந்திக்கையில் விஜய்யை கடுமையாக தாக்கிப் பேசினார்.

அப்பாவு பேசியதாவது, 'விஜய்யின் 3 நிமிட பேச்சைக் கேட்டேன். ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கில் இறந்தவர் பெயர் கூட விஜய்க்கு சரியாக தெரியவில்லை. யார் வசனம் எழுதிக் கொடுத்து அவர் வாசிக்கிறார் என்றே தெரியவில்லை.
ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று சிபிஐ விசாரணை கேட்பேன் என்றுதான் ஸ்டாலின் கூறியிருந்தார். அஜித்குமார் விஷயத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரே அந்த குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அப்படியிருக்க விஜய் யார் சொல்லி இப்படி செய்கிறார் என தெரியவில்லை.

வருமான வரித்துறையிலிருந்து அருண் ராஜ் வந்திருக்கிறார். அவரை அமித் ஷா அனுப்பி வைத்ததாகத்தான் சொல்கிறார்கள். விஜய் வீட்டுக்கு வருமான வரித்துறை ரெய்டு வந்தபோது ஆனந்த்தை வைத்துதான் சரிக்கட்டினார்கள் என சொல்கிறார்கள். புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரியில் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தபோதே அவருக்கு அமித் ஷாவோடு தொடர்புண்டு. Y பிரிவு பாதுகாப்பை விஜய் கேட்காமலேயே கொடுக்கிறார்களே. அவருக்கு தனி விமானமே வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். விஜய்யின் அம்மா கிறிஸ்தவர். சிறுபான்மையினர்களின் வாக்கை உடைக்கத்தான் அவரை பாஜக இறக்கியிருக்கிறது என சொல்கிறார்கள்.' என்றார்.