உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஜாதி, வருமானச் சான்று மனுக்களுக்கு உடனடித் தீா்வு
திருவாரூரில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின், கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தது: திருவாரூா் மாவட்டத்தில் 6 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. ஜூலை முதல் அக்டோபா் வரை நகா்ப்புற பகுதிகளில் 54 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 131 முகாம்களும் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
அந்தவகையில், இந்த முகாம்களில் உடனடித் தீா்வாக, வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிரும், இந்த முகாமில் மனு அளித்து பயன் பெறலாம் என்றாா்.
தொடா்ந்து, முகாமில் பெறப்பட்ட மனுக்களின் உடனடித் தீா்வாக வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டையை, மாவட்ட ஆட்சியரும், சட்டப்பேரவை உறுப்பினரும் வழங்கினா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, நகா்மன்றத் தலைவா் புவனபிரியா செந்தில், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, பணி நியமனக்குழு உறுப்பினா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.