Divorcee camp: ``விவாகரத்தான பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்த முகாம்..'' - கேரளப் பெண் சொல்வதென்ன?
விவாகரத்து என்பது ஒரு தனிப்பட்ட முடிவாக இல்லாமல் சமூகம் சார்ந்து இருக்கிறது. விவாகரத்து பெறும் பெண்களுக்காக ஒரு முகாமை உருவாக்கி இணையவாசிகளிடம் கவனம் பெற்று வருகிறார் ரஃபியா அஃபி.
பிரேக்கப் ஸ்டோரி என்று அழைக்கப்படும் இந்த முகாம் கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவாகரத்து பெற்ற, துணையிடமிருந்து பிரிந்த அல்லது கணவனை இழந்த பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான, மகிழ்ச்சியான இடமாக இது இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
தங்களின் மனதில் இருக்கும் அழுத்தங்களையும், கடந்த கால வாழ்க்கை பற்றிய கதைகளையும் எந்த ஒரு தயக்கமும் இன்றி அங்கு இருப்பவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

சொல்ல முடியாத சோகத்தில் இருக்கும் பெண்களுக்கும், இதைக் கேட்க யாராவது இருக்கிறார்களா? என்பதை பகிர்வதற்கும் இந்த இடம் ஒரு ஆதரவு தருகிறது.
வைரலாகும் வீடியோவில், கேரளாவின் முதல் விவாகரத்து கேம்ப் என்று பகிரப்பட்ட அதில் தங்களின் அனுபவங்களை அங்கு இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். எந்த ஒரு பயமும் இல்லாமல் சுதந்திரமாக பேசிக் கொள்கிறார்கள், நடனம் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். ஒரு புதிய பிணைப்பை உருவாக்குவதை இந்த முகாம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
"நாங்கள் குழந்தைகளைப் போல சிரித்தோம். நாங்கள் போர்வீரர்களைப் போல அழுதோம். மலைகளுக்குள் கத்தினோம். நட்சத்திரங்களின் கீழ் நாங்கள் நடனமாடினோம். வேறு யாருக்கும் புரியாத கதைகளைப் பகிர்ந்து கொண்டோம். அந்நியர்கள் சகோதரிகளாக மாறினர் என்ற கேப்ஷனுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ரஃபியாவின் இங்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.