கேரளா: 15 அடி ராஜநாகத்தை அசால்டாக பிடித்த பெண் - யார் இந்த ஜி.எஸ் ரோஷ்னி?
கேரளா வனத்துறையைச் சேர்ந்த ஜி.எஸ்.ரோஷ்னி என்ற பெண் வனத்துறை அதிகாரி 14-15 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை அசால்டாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இவரது வீடியோ வைரலாவது இது முதன்முறை அல்லது. பெரிய அளவிலன நாகங்களை அவரது அனுபவத்தின் மூலம் எளிமையாக அடக்கிவிடுகிறார் ரோஷ்னி. பேப்பராவிலும் அதேதான் நடந்தது.
கேரள வனத்துறையில் ரோஷ்னியின் 8 வருட பணி வாழ்க்கையில் 800க்கும் மேற்பட்ட விஷமுள்ள/விஷமற்ற பாம்புகளை மீட்டிருக்கிறார். இப்போது பருத்திப்பள்ளி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 நபர் விரைவு பதிலளிப்பு குழுவில் (Rapid Response Team) இடம் பெற்றுள்ளார் ரோஷ்னி.

வைரலான வீடியோவில் ஒரு நீளமான வளைந்த குச்சியையும் மற்றொரு குச்சியில் கட்டிய பையுடனும் தனியாக செயல்பட்டு பாம்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் ரோஷ்னி. ஓடையில் இறங்கி பிடிக்க முயன்ற அவர் பாம்பிடம் 'ப்ளீஸ்' எனக் கெஞ்சுவது மக்களை ஈர்த்துள்ளது.
6 நிமிடத்துக்குள் 20 கிலோ எடை கொண்ட அந்த பாம்ப்பை பையில் அடைத்துவிட்டார் ரோஷ்னி.
தெற்கு கேரளாவில் ராஜ நாகங்களைக் காண்பது அரிதானது என்பதால் ரோஷ்னி முதல்முறையாக ராஜநாகம் ஒன்றைப் பிடிக்கும் வீடியோவாக இது அமைந்துள்ளது.
பாம்புகள் மட்டுமல்லாமல் முள்ளம்பன்றிகள், மான்கள் மற்றும் சிவெட் பூனைகள் போன்ற உயிரினங்களையும் மீட்டுள்ளார் ரோஷ்னி.
ரோஷ்னியின் வீடியோவுக்கு பலர் கமண்ட் செய்துள்ளனர். சிலர் அவரது தைரியத்தைப் பாராட்டியுள்ளனர், கரப்பான்பூச்சிக்கும் பல்லிக்கும் பயப்படும் பெண்கள் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
சிலர் அவருக்கு ராஜநாகங்களைப் பிடித்து அனுபவமில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அவரது கைகளில் இருந்து கருவிகள் கீழே நழுவி விழுவதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Forest Beat Officer Roshni of Paruthipalli Range did not flinch even after seeing this 18-foot long #KingCobra!
— Rajan Medhekar (@Rajan_Medhekar) July 7, 2025
It was was caught by her from the residential area of Anchumaruthumoot, Peppara, Thiruvananthapuram, #Kerala, after locals bathing in the stream spotted it today. pic.twitter.com/37IdVsw3mx
G20 குளோபல் லேண்ட் முன்முயற்சியின் இயக்குனர் முரளி தும்மருகுடி, ரோஷ்னியின் வீடியோவைப் பகிர்ந்து பாராட்டி குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் "வன அதிகாரிகள் யாரும் விஷமுள்ள பாம்புகளைக் கையாளும்போது குறைந்தபட்ச சுய பாதுகாப்பு உபகரணங்களைக் கூட அணிவதுஇல்லை. பணியாளர் பாதுகாப்பு உபகரணங்கள் தைரியமில்லாதவர்கள் அல்லது கற்றுக்குட்டிகளுக்கானது அல்ல. பொறுப்பும் அறிவும் உள்ள ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டியது" என விமர்சனமும் செய்தார்.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ரோஷ்னியின் துணிச்சலைப் பாராட்டியதுடன், கேரள அரசு அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டுமென்றும் பாராட்டியுள்ளார்.
ராஜநாகங்களை அதிகமாக பிடித்ததில்லை என்றாலும், மலைப்பாம்புகளைப் பிடிப்பதில் அவர் வல்லுநர். அதிக எடைகொண்ட மலைப்பாம்புகளை மீட்ட பிறகு சில நாட்களுக்கு கூட உடலில் வலி நீடிக்கும் என்றாலும் தினம் தினம் கூட பாம்புகளை மீட்க உற்சாகமாக சென்று வருகிறார் ரோஷ்னி.
"மலைப் பாம்புகளைப் பிடிக்கும்போது அவை சிறுநீரும், மலமும் கழிக்கும். என்னதான் குளித்தாலும் அந்த நாற்றம் சில நாட்களுக்கு கூட நீடிக்கும். சாப்பிடக் கூட முடியாது" எனத் தனது விரக்தியை நகைச்சுவையாக ஒரு தனியார் செய்தி நிறுவனத்திடம் வெளிப்படுத்தியிருக்கிறார் ரோஷ்னி.
ரோஷ்னியின் கணவர் சுஜித் குமார் கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வருகிறார். அவரது இரு மகன்களும் விடலைப் பருவத்தினர். பெரும்பாலும் பாம்புகளைப் பிடிக்க இரவில்தான் அழைப்பு வரும் என்றாலும், அவரது குடும்பத்தினர் ஒவ்வொருமுறையும் அவரது பணிக்கு இடையூரில்லாமல் ஆதரவாக நடந்துகொள்கின்றனர் என்கிறார்.
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோஷ்னி, அவர் பாம்புகளை மீட்கும் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.