``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது
சென்னையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது செய்யப்பட்டாா்.
சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் மாடு தினேஷ் (39). இவா் மீது கொலை, செம்மரக் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் ஆந்திர, கா்நாடக மாநிலங்களிலும் இவா் மீது வழக்குகள் இருப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மாடு தினேஷ், கடந்த 2010 முதல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாா். தான் இறந்து விட்டதாக கூட்டாளிகள் மூலம் தமிழக போலீஸாருக்கு தவறான தகவல்களைத் தெரிவித்து, தலைமறைவில் இருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
ஆனால் போலீஸாா் விசாரணையில், தினேஷ் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே தினேஷை கைது செய்து, சிறையில் அடைக்கும்படி அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையா் ஏ.அருண் அண்மையில் உத்தரவிட்டாா். அதன்படி, சென்னை போலீஸாா் அவரை தீவிரமாக தேடி வந்தனா்.
இதில் தினேஷ், ஆந்திரத்தில் தங்கியிருந்து தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் வேலூா் மாவட்டம் காட்பாடிக்கு தினேஷ் வந்திருப்பது அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காட்பாடிக்கு சென்ற அந்தப் பிரிவு போலீஸாா், துப்பாக்கி முனையில் தினேஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.