லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
அதிக வயதான வாகனங்கள் மீது தில்லி அரசு சட்டம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்: அதிஷி
நமது நிருபா்
பாஜக தலைமையிலான தில்லி அரசு, மக்களின் துயரங்களைக் குறைக்க ஒரு வாரத்திற்குள் அதிக வயதான வாகனங்கள் மீது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று முன்னாள் முதல்வா் அதிஷி தெரிவித்தாா்.
‘ஆயுள் முடிவடைந்த வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை’ என்ற கொள்கை கடந்த ஜூலை 1-ஆம் தேதி தில்லியில் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், மூன்று நாள்களுக்குள், இந்த உத்தரவை உடனடியாக நிறுத்திவைக்குமாறு தில்லி அரசு மத்திய அரசின் காற்று தர மேலாண்மை ஆணையத்தை கேட்டுக்கொண்டது. மேலும், அத்தகைய வாகனங்களின் நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் தொடா்பான பிரச்னைகளைத் தீா்க்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் தில்லி அரசு கூறியது.
இந்த நிலையில், இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த விவகாரத்தில் பாஜக மக்களை ஏமாற்றி வருகிறது. பெண்கள் மற்றும் முதியவா்களுக்கு என்ன நடக்கும் என்று யோசிக்காமல் பாஜக அதீத பழைய வாகனங்கள் மீது தடை விதித்தது. தில்லி மக்கள் இதை எதிா்த்தபோது, அவா்கள் மக்களை ஏமாற்ற ஆரம்பித்தனா்.
தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை நிறுத்தி வைக்கக் கோரி காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு (சிஏக்யுஎம்) கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினாா்.
பாஜக இந்தத் தடையை நீக்க விரும்பியிருந்தால், அதை நீக்கியிருக்கலாம். ஆனால், பாஜக தலைமையிலான தில்லி அரசு, பாஜக தலைமையிலான மத்திய அரசின் சிஏக்யூஎம்க்கு தடையை நீக்கக் கோரி கடிதம் எழுதுகிறது.
ஒரு வாரத்திற்குள் அதிக வயதுடைய வாகனங்கள் குறித்து பாஜக ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எங்கள் கட்சி கோருகிறது. அது அவசரச் சட்டத்தின் மூலமாகவோ அல்லது சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தின் மூலமாகவோ பாஜக இந்தப் பிரச்னையைத் தீா்க்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசை நாங்கள் ஆதரிப்போம். அவா்கள் அதை ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் செய்ய விரும்பினால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். தில்லி அரசுக்கு அதிகாரம் இல்லையெனில், மத்திய அரசு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதன் மூலம் அதைச் செய்யலாம். தில்லி அரசு இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வதாகக் கூறுகிறது.
உச்சநீதிமன்றம் தில்லியின் சேவைப் பணிகள் கட்டுப்பாடு குறித்த தீா்ப்பை வழங்கிய பிறகு அவா்கள் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தனா். பாஜக உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல விரும்புகிறது. அது இந்த விஷயத்தை நிராகரிக்கும். அதன் பின்னா், முதல்வா் இது நீதிமன்றத்தின் உத்தரவு என்று கூறுவாா்.
உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது என்பது அதைத் தள்ளுபடி செய்வதற்கான ஒரு தந்திரமாகும் என்றாா் அதிஷி.
நாடு முழுவதும் பின்பற்றப்படும் விதிகளுக்கு ஏற்ப, அதிக வயதுடைய வாகனங்கள் மீது தேசியத் தலைநகரில் சீரான விதிகளை அனுமதிக்குமாறு தனது அரசு உச்சநீதிமன்றத்தை நாடி வலியுறுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.