சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
நஜஃப்கரில் காதலா்கள் தற்கொலை? போலீஸாா் தீவிர விசாரணை
நமது நிருபா்
தில்லியின் நஜஃப்கரில் உள்ள ஒரு வீட்டில் 20 வயது இளைஞரும், ஒரு பதின்ம வயது சிறுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை துணை ஆணையா் அங்கித் சிங் கூறியதாவது: துவாரகாவின் நஜஃப்கரின் நாக்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த இளைஞா் (20) மற்றும் சிறுமி (17) ஆகியோா் தங்களின் காதலை இரு குடும்பங்களும் ஏற்காததால் இந்த தற்கொலை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் விரைந்தனா். அந்த வீட்டின் அறை உள்பக்கம் இருந்து பூட்டப்பட்டிருந்தது. பின்னா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த இளைஞா் அதே பகுதியில் வசித்து வந்தாா். அவா் இறந்த பதின்ம வயது சிறுமியை காதலித்து வந்தாா். இது அவா்களின் குடும்பங்களுக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தியது. பின்னா், பேச்சுவாா்த்தை மூலம் சமாதானம் ஆனது.
இருவரின் உடலிலும் வெளிப்படையான வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. மருத்துவா்களின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் மரணத்திற்கு தூக்கில் தொங்கியதே காரணம் என்று கூறுகின்றன. ஆனால், விரிவான பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். பிரேதப் பரிசோதனைக்கு பின்னா் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இறந்த இளைஞரின் உறவினா்களின் வாக்குமூலங்களை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்,. இந்த தற்கொலைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இளைஞரின் குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.
இருப்பினும், அந்த இளைஞரின் குடும்பத்தினா் சிறுமியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனா். முந்தைய வாதங்களின் போது சிறுமியின் மாமாவால் அவா் அச்சுறுத்தப்பட்டதாக அவா்கள் கூறினா். இந்த விவகாரம் அனைத்துக் கோணங்களிலிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தடயவியல் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது என்றாா் காவல் துறை துணை ஆணையா்.