லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
பல்பொருள் விற்பனையக வளாக தீ விபத்து: விசாரணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு
நமது நிருபா்
தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள தனியாா் பல்பொருள் விற்பனையக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த விற்பனையகத்தின் நிா்வாகம், தில்லி காவல்துறை உள்ளிட்டோரின் அலட்சியப் போக்கு குறித்து நீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணை நடத்தக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் ‘குடும்ப்’ என்ற தன்னாா்வ அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவதில் கடுமையான குறைபாடுகளைச் சுட்டிகாட்டியுள்ள அந்த அமைப்பு, கட்டாய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் நெரிசலான பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு உரிமங்கள் மற்றும் தடையின்மை சான்றிதழ்கள் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த மனுவில், பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்தத் தவறியதற்காக தீயணைப்புத் துறை, தில்லி மாநகராட்சி
மற்றும் காவல்துறை அதிகாரிகளின் நடத்தையை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட பல்பொருள் விற்பனையகம் மற்றும் அருகிலுள்ள வணிக நிறுவனங்கள் செல்லுபடியாகும் தடையின்மைச் சான்றிதழ்களை வைத்திருக்கிா என்பதை மதிப்பிடுவதற்கும், சட்டவிரோதமாக இயங்கும் நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கும் உத்தரவிட வேண்டும்.
கரோல் பாக் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள உரிமம் பெறாத உணவகங்கள், பயிற்சி நிறுவனங்கள், ஷாப்பிங் மையங்கள் மற்றும் பிற நிறுவனங்களை உடனடியாக மூடுவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிப்பத்துடன், அறிக்கை சமா்ப்பிக்கப்படும் வரை சம்பவம் நிகழ்ந்தது தொடா்பான சிசிடிவி காட்சிப் பதிவுகளை பாதுகாக்கவும், முதல் தகவல் குறித்த நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும் தில்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூலையில் பழைய ராஜீந்தா் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் அடித்தளப் பகுதியில் வடிகால் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் மூன்று மாணவா்கள் நீரில் மூழ்கி இறந்தது தொடா்பான வழக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கரோல் பாக் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட பல்பொருள் விற்பனையகத்தில் ஜூலை 4- ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் தீரேந்தா் பிரதாப் (25) என்பவா் மின்தூக்கியில் இறந்துகிடந்தாா். மேலும், தீயணைப்பு நடவடிக்கையின்போது எரிந்த நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.