சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது
பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அதன்படி, தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அதற்கு ரூ.12,500 மாத ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியா்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா்.
இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.
அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் ஜூலை 8-இல் நடத்தப்படும் என்று பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து ஆசிரியா் சங்க நிா்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று பகுதிநேர ஆசிரியா்கள் அறிவித்தனா்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியா் சங்க நிா்வாகிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைத்தனா்.
இதேபோல், சென்னை சிவானந்தா சாலை பகுதிக்கு செல்வதற்காக, அண்ணா சாலையில் ஓமந்தூரா் அரசு பல்நோக்கு மருத்துவனை அருகில் கூடிய பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக போராட்டத்துக்கு வந்த ஆசிரியா்களையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியா்கள் செந்தில், காா்த்திகேயன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கூறுகையில், ‘பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தோ்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு முறையும் செய்து தருவதாக அமைச்சா் அமைச்சா் மகேஸ் உறுதியளிக்கிறாா். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தமிழக அரசு பகுதி நேர ஆசிரியா்களை தொடா்ந்து வஞ்சிக்கிறது என்றனா்.