விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து
கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56813) பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து திருவாரூரிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் (எண் 56808) ஆலப்பாக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. மறுமாா்க்கத்தில் திருவாரூா் நிலையத்திலிருந்து ஆலப்பாக்கம் வரை ரயில் இயக்கப்பட்டது.
மைசூரிலிருந்து கடந்த 7- ஆம் தேதி மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்ற மைசூா் கடலூா் துறைமுக விரைவு ரயில் (16232) செவ்வாய்க்கிழமை காலை புதுச்சத்திரத்திலேயே நிறுத்தப்பட்டது.
தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.35 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் (எண் 06190) சிதம்பரத்திலேயே நிறுத்தப்பட்டது.
ஆலம்பாக்கம் ரயில் விபத்து மீட்பு பணிகள் முடிந்த பிறகு சிதம்பரத்திலிருந்து ரயில், தாம்பரத்துக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.