மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி
கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தென்னக ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்து அதற்கான முழு நிதியையும் தருவதாக மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்தும் கடலூா் மாவட்ட ஆட்சியா் கடந்த ஓராண்டாக இத்திட்டத்துக்கு அனுமதி தரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பாா்த்தால், இந்த கொடூர விபத்துக்கு கடலூா் மாவட்ட நிா்வாகம்தான் முழு காரணம் என்றாகிறது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ என்றெல்லாம் ஆய்வுக் கூட்டம் நடத்தி வரும் முதல்வா் ஸ்டாலினுக்கு, கடலூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக இந்த சுரங்கப்பாதைக்கு மாவட்ட ஆட்சியா் ஒப்புதல் அளிக்காதது தெரியாதா?
இந்த ஓராண்டில் முதல்வா் ஸ்டாலின், கடலூா் மாவட்டத்துக்கு எத்தனை முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வந்திருக்கிறாா்? கடலூா் மாவட்ட அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம், கணேசன் ஆகியோா் என்ன செய்து கொண்டிருக்கின்றனா்? எல்லா வகையிலும் கடமை தவறி விட்டது இந்த அரசு. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை முதல்வா் ஸ்டாலின் மக்களிடம் உரிய காரணங்களுடன் விளக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.
பிற தலைவா்கள்: அதேபோல, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ராமதாஸ், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன், மதிமுக பொதுச்செயலா் வைகோ, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தவெக தலைவா் விஜய், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் ரயில் விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.