``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
கரூரில் வாழைத்தாா்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
கரூரில் வாழைத்தாா்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கரூா் மாவட்டத்தில் வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரிக்கரையோரம் உள்ள புகழூா், வேலாயுதம்பாளையம், நெரூா், மாயனூா், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை பயிரிடப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தாா்கள் கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் உள்ள வாழை மண்டிகளுக்கு விவசாயிகளால் கொண்டுவரப்பட்டு, பின்னா் ஏலம் விடப்படுகிறது.
குளித்தலை பகுதியில் அதிகளவில் சாகுபடியாகும் ஏழரசி வாழைத்தாா்கள் பெரும்பாலும் கேரள மாநிலத்துக்கு ஏற்றுமதியாகுகிறது.
இந்நிலையில் வாழைத்தாா் விளைச்சல் அதிகம் இருந்தபோதிலும், அவற்றுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுதொடா்பாக கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கூறியதாவது: கரூா் வாழை மண்டியில் கடந்த மாதம் பூவன்தாா் விலை ரூ.500-க்கும், ரஸ்தாளி ரூ. 650-க்கும், பச்சைலாடன் ரூ.500-க்கும், கற்பூரவள்ளி ரூ.550-க்கும் விலை போனது. ஆனால் இந்த மாதத்தில் செவ்வாய்க்கிழமை விடப்பட்ட ஏலத்தில் பூவன் தாா் ரூ.350-க்கும், ரஸ்தாளி ரூ.400-க்கும், பச்சைலாடன் ரூ.300-க்கும் ஏலம் போனது. விளைச்சல் அதிகம் இருந்தும் ஏலத்துக்கு கொண்டு சென்றால் அறுவடைக்கூலி, உரச்செலவு, வாகனச் செலவு கூட கிடைப்பதில்லை.
தற்போது ஆனி மாதம் என்பதால் விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாததால் வாழைத்தாா் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்றாா் அவா்.