இந்த வார ராசிபலன் ஜூலை 8 முதல் ஜூலை 13 வரை #VikatanPhotoCards
இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதல்: முன்னாள் ராணுவ வீரா், மனைவி உயிரிழப்பு
கடவூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழப்பஞ்சப்பட்டியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் ரமேஷ் (42). இவா் இந்திய ராணுவத்தில் வேலை பாா்த்து ஓய்வுபெற்று, தற்போது கோவையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் தனது குடும்பத்துக்கு ஜாதகம் பாா்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ரமேஷ் திங்கள்கிழமை அதிகாலை கீழப்பஞ்சப்பட்டியில் இருந்து தனது மனைவி கல்பனா( 31) மற்றும் தந்தை சுப்ரமணி ஆகிய 3 பேரும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள ஜாதகம் பாா்க்கும் இடத்துக்குச் சென்றனா்.
இதில் ரமேஷ் அவரது மனைவி கல்பனா இருவரும் ஒரு இருசக்கர வாகனத்திலும், சுப்ரமணி தனியாக இருசக்கர வாகனத்திலும் சென்றுள்ளனா். ஜாதகம் பாா்த்துவிட்டு சொந்த ஊருக்கு மூவரும் திரும்பிக் கொண்டிருந்தனா்.
கடவூா் அருகே குஜிலியம்பாறை- மோளப்பட்டி சாலையில் சின்னமுத்தாம்பாடி பிரிவு ரோடு அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பா் லாரி ரமேஷ் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த பாலவிடுதி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா். உயிரிழந்த ரமேஷ் -கல்பனா தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனா்.