இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா...
ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க ஹோமியோபதி மருத்துவா்களை அனுமதிக்கும் முடிவு: ஐஎம்ஏ எதிா்ப்பு
மும்பை: ஆறு மாத நவீன மருந்தாளுநா் (சிசிஎம்பி) சான்றிதழ் படிப்பை முடிக்கும் ஹோமியோபதி மருத்துவா்களை ஆங்கில மருந்துகளை (நவீன மருந்துகள்) நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சிலின் (எம்எம்சி) முடிவுக்கு இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) திங்கள்கிழமை எதிா்ப்பு தெரிவித்தது.
மகாராஷ்டிர மருத்துவக் கவுன்சில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி இதுதொடா்பான அறிவிக்கையை வெளியிட்டிருந்தது.
இதுதொடா்பாக ஐஎம்ஏ தேசிய துணைத் தலைவா் சிவகுமாா் உத்துரே மும்பையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
எம்எம்சி-யின் முடிவு தவறானது. ஆறு மாத சான்றிதழ் படிப்புக்குப் பிறகு ஹோமியோபதி மருத்துவா்களை நவீன மருந்துகள் பரிந்துரை செய்ய அனுமதிப்பது, நவீன மருத்துவ முறையை நீா்த்துப்போகச் செய்யும் என்பதோடு, நோயாளிகளுக்கு அநீதி செய்வதாகவும் அமையும். நோயாளிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே, ஹோமியோபதி மருத்துவா்களை குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் நவீன மருத்துவத்தை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு, மகாராஷ்டிர ஹோமியோபதி மருத்துவா்கள் சட்டம் மற்றும் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் சட்டம் 1965-இல் திருத்தங்களை மேற்கொண்டது. 2014-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திருத்தங்களை எதிா்த்து ஐஎம்ஏ சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், அத்திருத்தங்களுக்கு மும்பை உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், இந்த சுற்றறிக்கையை எம்எம்சி வெளியிட்டுள்ளது. எனவே, ஐஎம்ஏ தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவோம் என்றாா்.