இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
UP: 7-ம் வகுப்பு மாணவிக்கு யோகி ஆதித்யநாத் அளித்த நம்பிக்கை; மறுத்த பள்ளி நிர்வாகம் - என்ன நடந்தது?
பன்குரி திரிபாதி என்ற 7-ம் வகுப்பு மாணவி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் தனது கல்விக்கு உதவி கேட்டது, அந்த மாநிலத்தில் அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது.
பன்குரியின் தந்தை ராஜீவ் குமாருக்கு ஒரு விபத்தில் காலில் அடிபட்டதால் வேலை இழந்துள்ளார். இதனால் கடும் நெருக்கடியில் உள்ள அவரது குடும்பத்தினர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து பள்ளியில் கட்டணத்தை தள்ளுபடி செய்யும்படிக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்திக்க வந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த யோகி ஆதித்யநாத், அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார்.
ஆனால் அந்த பெண் பெற்றோருடன் மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது பள்ளியில் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய மறுத்ததுடன், குழந்தையும் பெற்றோரையும் அவமனாப்படுத்தும்படியாக நடந்துக்கொண்டுள்ளனர்.
"அவர்கள் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய முடியாது எனக் கூறிவிட்டனர். என் பெற்றோர் கட்டண விலக்கு கோரினால் பள்ளியை நடத்த முடியாமல் போய்விடும், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்" எனத் தெரிவித்துள்ளார் மாணவி பன்குரி.
பன்குரி கோரக்பூர் மாவட்டம் பக்கிபாக்கில் உள்ள சரஸ்வதி சிஷு மந்திர் என்ற பள்ளியில் படித்து வருகிறார். ஆர்.எஸ்.எஸின் கல்வி அமைப்பான வித்யா பாரதியின் கீழ் செயல்படும் அந்த பள்ளியில் 7 வகுப்பு மாணவர்களுக்கு 1,650 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பன்குரி 18,000 ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
"என் தந்தை உடைந்துவிட்டார். அவரிடம் யாருமே இப்படி பேசியது இல்லை. முதலமைச்சர் என் கனவுகளை நொருங்கவிடமாட்டார் என நான் நம்புகிறேன். நான் ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறேன்" எனக் கூறியுள்ளார் அந்த மாணவி.
Gorakhpur, Uttar Pradesh | Student Pankhuri Tripathi had been out of school for 4 months.
— Satyaagrah (@satyaagrahindia) July 8, 2025
She went to ‘Janta Darbar’ and personally met CM Yogi Adityanath for help.
After his assurance, her school admission was reinstated.
Her father Rajeev Tripathi expressed heartfelt… pic.twitter.com/u89yaCMDJn
கோரக்பூர் மாவட்டம் யோகி ஆதித்யநாத்துக்கு முக்கியமான ஒன்று. அவர் முதலமைச்சர் ஆகும் முன்னர் 5 முறை கோரக்பூர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோரக்பூர் மடத்தின் தலைமை பூசாரியாகவும் அவர் திகழ்கிறார்.
இந்த விஷயத்தில் தலையிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "அந்தக் குழந்தையின் கல்வி தடைபடாது என்ற உறுதிப்பாட்டை நான் வழங்குகிறேன். இதுதான் பாஜகவின் 'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ' என்ற போலி முழக்கங்களின் உண்மை. குழந்தைகளிடம் பொய் சொல்ல வேண்டாம் என்று பாஜகவை நாங்கள் வலியுறுத்துகிறோம்" எனப் பேசியுள்ளார்.
ராஜிவ் திரிப்பாதி கோவிட் காலத்தில் விபத்து ஏற்பட்டு கால்களில் பாதிப்பு ஏற்பட்டதால் வேலையை இழந்துள்ளார். அவரது இரண்டு குழந்தைகளும் ஆங்கில வழிப் பள்ளியில் படித்து வந்துள்ளனர். மூத்த மகன் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனது கல்வியை எப்படியோ சமாளித்து வருகிறார்.

இளைமகள் பன்குரி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார். "அவளது கல்வியை நிறுத்துவது குறித்து யோசித்து வருகிறேன். அந்த நேரத்தில்தான் முதலமைச்சரிடம் உதவி கேட்கலாமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அதற்காக ஜூலை 1-ம் தேதி அவரை சந்தித்தோம்" எனக் கூறியுள்ளார் ராஜிவ்.
அகிலேஷ் யாதவின் உதவியை ஏற்க மறுக்கும் வகையில், "அவர் (அகிலேஷ்) ட்வீட் செய்துள்ளார். ஆனால் நாங்கள் மடத்துடனும் மகாராஜ் ஜியுடனும் (யோகி ஆதித்யநாத்) தொடர்புடையவர்கள், மேலும் அவர் என் மகளின் கல்வியை உறுதி செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்." எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மாநில கல்வித்துறை சார்பில் குறிப்பிட்ட பள்ளிக்கு கடிதம் எழுதப்பட்டதாக என்.டி.டி.வி செய்தி தளத்திடம் ஒரு கல்வி அதிகாரி கூறியிருக்கிறார். எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. கல்வி நிறுவனமும் இதுகுறித்து எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.