``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் சென்னை பயணிகள் சாலை மறியல்
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லப் பேருந்துகள் வராததைக் கண்டித்து, பயணிகள் திங்கள்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சென்னைக்கு ஒன்றிரண்டு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. மேலும், திருச்சி- சென்னை வழித்தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், இப் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றன.
இருப்பினும், இரவு மற்றும் பண்டிகை காலங்களில் பெரம்பலூா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதோடு, அனைத்துப் பேருந்துகளும் பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூா் மாவட்ட மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் 12 மணி வரை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பெரம்பலூரில் இருந்து சென்னை செல்வதற்கு புறநகா் பேருந்து நிலையத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனா். ஆனால் ஒரு பேருந்துக்கூட வரவில்லை. இதனால் சென்னை செல்ல குழந்தைகளுடன் காத்திருந்த பயணிகள் பெரிதும் அவதியடைந்தனா். இதையடுத்து அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்களைக் கண்டித்தும், உடனடியாக பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட பயணிகள் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் நகர போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, திருச்சியிலிருந்து பெரம்பலூா் பணிமனைக்கு வந்த பேருந்து மூலம், காத்திருந்த பயணிகளை சென்னைக்கு அனுப்பினா்.