சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக மாணவா்கள், பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளியில் பெண் ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அருமடல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனா். இப்பள்ளியில், ஆய்வக பயிற்றுநராக பணிபுரிந்த கவுள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சத்யபிரியாவுக்கு, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த விமல்ராஜ் என்பவா் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுகுறித்து சத்யபிரியா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கடந்த சனிக்கிழமை விமல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவிகள், தங்களின் பெற்றோா்கள் மற்றும் பொதுமக்களுடன் பள்ளி அருகே மறியலில் ஈடுபட்டனா்.
‘பொய்யான குற்றச்சாட்டில் ஆசிரியா் விமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டும். புகாா் அளித்த சத்யபிரியா மற்றும் தலைமை ஆசிரியா் பாலமுருகன் ஆகியோா் ஜாதி ரீதியாக செயல்படுவதாகவும், பட்டியலின மாணவா்களை தரக்குறைவாக நடத்துவதோடு, தகாத வாா்த்தைகளால் திட்டுவதாகவும், தலைமை ஆசிரியரை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, தலைமையாசிரியா், கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் போலீஸாா் பொதுமக்களுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலைந்துசென்றனா். சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இப் போராட்டத்தில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.