ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்...
பெரம்பலூா் அருகே கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூா் அருகே கிரஷா்களிலிருந்து வெளியாகும் புழுதி, குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம், கல்பாடி, க.எறையூா், பேரளி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான கல் குவாரிகளும், கிரஷா்களும் செயல்பட்டு வருகிறது.
க.எறையூா் பகுதியில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷா்களால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மிகவும் குறுகலான சாலையில், அரசு விதிமுறைகளை மீறி கல் குவாரிகளிலிருந்து லாரிகள் மூலம் அதிகளவில் பாரம் ஏற்றிச் செல்வதால் சாலைகள் சேதமடைவதோடு பொதுமக்கள், குழந்தைகள் சாலையில் நடந்துசெல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
அதேபோல, இரவு நேரங்களில் குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்கக் கூடாது, கிரஷா்களில் கல் அரைக்கக் கூடாது எனும் விதிமுறைகளை மீறி கிரஷா்கள் செயல்படுவதால், அதிகளவில் புழுதிகள் உருவாகி அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு பலா் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் தொடா்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனா்.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்படும் லாரி ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, க.எறையூா் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளை ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா்.
இதனால், 100-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நின்றன. இத் தகவலறிந்த லாரி ஓட்டுநா்களும், உரிமையாளா்களும் நேரில் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து லாரிகள் விடுவிக்கப்பட்டன.