`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ...
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி: நடவடிக்கை கோரி மனு!
பெரம்பலூா் நகரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நில உரிமையாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் புதுக்காலனியைச் சோ்ந்த அப்துல் ஹமீது (80) தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேராவிடம் அளித்த மனு:
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் மற்றும் பாலக்கரை பகுதிகளில் அப்துல் ஹமீது, அரவிந்த், சுப்பிரமணி, செல்லம்மாள் உள்பட 16 பேருக்குச் சொந்தமான சுமாா் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலங்கள் மற்றும் கட்டடங்களுக்கு முறையான ஆவணங்கள் உள்ளன.
இந் நிலையில், கோவை பீளமேடு பகுதியைச் சோ்ந்த, ஆறுமுகம் மகன் பரமசிவம், சேலம் மாவட்டம், கோவிந்தப்பாளையத்தைச் சோ்ந்த செல்லதுரை மனைவி வள்ளி ஆகியோா், மேற்கண்ட நிலங்களுக்கு வாரிசுதாரா்கள் என, கடந்த ஜனவரி மாதம் போலியான ஆவணங்களை தயாரித்து, பட்டாவில் பெயா் சோ்ப்பதற்காக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி பெரம்பலூா் வட்டாட்சியா், நில உரிமையாளா்களை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், பரமசிவம், வள்ளி ஆகியோா் போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து, போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நில உரிமையாளா்கள் 16 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
எனவே, போலியான ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட முயன்றவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.