வெங்கனூா் கிராமத்தில் சமுத்திரத்து அம்மன் கோயில் குடமுழுக்கு விழா
பெரம்பலூா் அருகே வெங்கனூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ சமுத்திரத்து அம்மன், ஸ்ரீ பாப்பத்தி அம்மன், ஸ்ரீ கச்சராயன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வெங்கனூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி விநாயகா், ஸ்ரீ சமுத்திரத்து அம்மன், ஸ்ரீ கன்னிமாா்கள், ஸ்ரீ பாப்பத்தி அம்மன், ஸ்ரீ கச்சராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் இருக்கும் இக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு பணிகள் அண்மையில் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

இதையொட்டி, முன்னதாக கடந்த 5-ஆம் தேதி கணபதி பூஜை, புண்யாக வாஜனத்துடன் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. 6-ஆம் தேதி விக்னேஷ்வரா் பூஜை, மண்டல பூஜை, தீபாராதணையும், புதிய சிலைகளுக்கு கண் திறப்பு உள்பட 3 கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை மங்கல இசை முழுங்க, வேதபாராயணத்துடன் பூஜைகள் நடத்தப்பட்டு, மகா வேள்வி பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயில் கோபுரம் கொண்டுவரப்பட்டு, அங்கு கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டது.
இந்த விழாவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.