செய்திகள் :

சகோதர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த `இந்தி திணிப்பு'- வலுப்பெறுகிறதா உத்தவ்-ன் சிவசேனா?|In Depth

post image

1960 காலக்கட்டத்தில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி தழைத்தோங்கி இருந்தது. இந்தப் பொருளாதார நெருக்கடி காங்கிரஸிற்கு எதிரான மனப்போக்கை அதிகரிக்க செய்திருந்தது. கம்யூனிஸ்ட்கள், சோசியலிஸ்டுகள், திராவிட கட்சிகள் என எல்லோரும் காங்கிரஸிற்கு எதிராக இருந்தன. இந்தக் காலக்கட்டத்தில்தான் காங்கிரஸின் அரசியல், பொருளாதாரக் கலாச்சாரக் கொள்கைகளைத் தனது கருப்பு, வெள்ளைக்கோடுகளால் வெளிச்சம் போட்டு காட்டினார் ஒரு கார்டூனிஸ்ட். அந்த கருப்பு வெள்ளைக் கோடுகளுக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை அவர்தான் பாலாசாகேப் என்னும் பால் தாக்கரே.

பால் தாக்கரே
பால் தாக்கரே

1926 ஆம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பால் தாக்கரே மும்பையில் உள்ள ‘The Free Press Journal’ என்ற ஆங்கில நாளிதழில் கார்ட்டூனிஸ்டாக தனதுப் பயணத்தைத் தொடங்கியவர். பால் தாக்கரேவின் கேலி சித்திரங்கள் ‘The Times Of India’-வின் ஞாயிறு பதிப்பகங்களில் வெளியாகி அவரை வெளி உலகத்திற்கு அடையாளப்படுத்தியது. பிரபல கார்ட்டூனிஸ்டாக வலம் வந்த தாக்கரே 1960-ம் ஆண்டு தனது சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரே உடன் இணைந்து ‘மார்மிக்’ என்ற மராத்தி மொழி அரசியல் வார இதழைத் தொடங்கினார்.

இந்த இதழ் மூலம் மும்பையில் மராத்தியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வெளிமாநில மக்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். அதாவது குஜராத்தியர்கள், தெனிந்தியர்களுக்கு எதிரான இலக்கைக் கொண்டிருந்தார். இதனால் ‘மார்மிக்’ இதழ் மராத்திய மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதுவே ‘சிவசேனா’ கட்சி உருவாவதற்கு அடித்தளமாக இருந்தது.

தாக்கரே தொடங்கிய சிவசேனா
தாக்கரே தொடங்கிய சிவசேனா

1966-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி மஹாராஷ்டிரா மக்களின் பிறப்புரிமைகளுக்காக போராடும் நோக்கத்துடன் ‘சிவசேனா’ என்ற கட்சியைத் தொடங்கினார். `வந்தேறிகளை அகற்றுவதே இக்கட்சியின் மிகப்பெரிய நோக்கம்' என்றார்.

மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியில் மராத்தியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கட்சி பல போராட்டங்களை நடத்தியது. கலவரங்களில் பல உயிர்களும் பறிபோயிருக்கின்றன. மேலும் 1990களில், சிவசேனா இந்துத்துவக் கருத்தியலை தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கியது. ‘இந்தியாவை இந்துக்களின் ராஜ்ஜியம்’ என்று அழைக்கத் தொடங்குமாறு வற்புறுத்திய தாக்கரே 'நமது மதமான இந்து மதம் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்' என்று சூளுரைத்தார்.

விநாயகர் பூஜை, சிவாஜி விழா என்று வளர்ந்த சிவசேனா 1992- 93 பாபர் மசூதி இடிப்பை ஒட்டியக் கலவரங்களில் முக்கியப் பங்காற்றியது. நூறுக்கணக்கான முஸ்லீம்கள் தாக்கரே ஆதரவாளர்களால் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. கலவரங்களைத் தூண்டும் தாக்கரே மீது பல வழக்குகள் இருந்தாலும் அவர் மகாராஷ்டிராவின் அசைக்க முடியாத தலைவராகவே இருந்தார். தூரத்தில் இருந்து அரசை இயக்கும் தலைவராக இருந்தார். ஆட்சி கட்டிலில் அமராவிட்டாலும் அரசியல், சமூகம், பொருளாதாரம் என பல்வேறு தளங்களில் தன்னுடைய அசாத்தியத் திறமையால் பால் தாக்கரே மஹாராஷ்டிராவை தனது கட்டுக்குள் வைத்திருந்தார். வாழ்நாள் முழுவதும் இனவாதம், மதவாதம் என சர்ச்சையை சந்தித்த தாக்கரேவின் மறைவிற்கு பிறகு அவரது மகன் உத்தவ் தாக்கரே சிவசேனாவை வழிநடத்தத் துவங்கினார்.

பால் தாக்கரே - உத்தவ் தாக்கரே
பால் தாக்கரே - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவின் கட்சியாகப் பார்க்கப்பட்ட சிவசேனாவின் முகத்தை ஒட்டுமொத்த இந்து மக்களுக்குமானக் கட்சியாக மாற்றுவதற்கான முயற்சியைக் கையில் எடுத்தார். ஆனால் அவரின் வியூகம் 2014 தேர்தலில் எடுபடவில்லை. 2015 பாஜக அரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தாலும் கட்சியுடன் ஒரு பிணைப்பு இல்லாமலேயே உத்தவ் தாக்கரே இருந்தார். மீண்டும் மஹாராஷ்டிராவில் தாக்கரே குடும்பத்தின் கொடியை பறக்க வைக்க ஆசைப்பட்டார் உத்தவ் தாக்கரே. அதனால் சிவசேனாவின் தனித்த அடையாளத்தை உருவாக்க நினைத்த உத்தவ் மீண்டும் மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கே என்ற பழைய கோஷத்தைக் கையில் எடுத்தார். மேலும் பணமதிப்பிழப்பு, ரபேல் விவகாரங்களை கையில் எடுத்து அரசியல் செய்தது சிவசேனா.

மோடி அலையை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு வலிமையான தலைமை வேண்டும் என்று எண்ணிய உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யா தாக்கரேவை அரசியலில் களமிறக்கினார். 2019 நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் அவரின் பங்கு முக்கியமாக இருந்தது. 2019- 2022 வரை உத்தவ் தாக்கரே ஆட்சி செய்தார். இதனிடையே 2022ம் ஆண்டு கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்தார்.

ஆதித்யா தாக்கரே - உத்தவ் தாக்கரே
ஆதித்யா தாக்கரே - உத்தவ் தாக்கரே

சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவு மாநிலத்தின் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2022இல், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, சிவசேனாவைப் பிளவுபடுத்தி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார் ஏக்நாத் ஷிண்டே. சிவசேனா இரண்டாக உடைந்தது. அதுமட்டுமல்லாமல், அந்தக் கட்சி அதனுடைய மைய கொள்கைகளிலிருந்து விலகிப் போனதாக பார்க்கப்பட்டது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

இந்து ராஜ்ஜியம், மராட்டியம் மராட்டியர்களுக்கே போன்ற அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து அரசியல் லாபத்துக்காக ஒதுங்கியிருந்ததை போன்ற தோற்றம் உண்டானது. சிவசேனாவை பலவீனப்படுத்த பா.ஜ.கவுக்கு இதைவிட பெரிய ஆயுதம் தேவைப்படவில்லை. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடனேயே கூட்டணி வைத்து 2024 சட்டமன்றத் தேர்தலையும் பா.ஜ.க வென்றது. பா.ஜ.கவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். சிவசேனாவின் எதிர்காலம் என்ன? தன்னுடைய மகனை முன்நிறுத்தி கட்சியை அவர் கையில் ஒப்படைக்கும் உத்தவ் தாக்கரேவின் திட்டம் என்னவாகும் போன்ற கேள்விகள் எழுந்திருந்தன.

இந்நிலையில்தான் "நாங்கள் ஒன்றாக வந்துள்ளோம். இனி ஒன்றாகவே இருப்போம்'’ என்று 20 ஆண்டு பகையை மறந்து தனது சகோதரரான ராஜ் தாக்கரேவை அரவணைத்து உத்தவ் தாக்கரே பேசியிருக்கிறார். இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே ஆகியோரின் கட்சிகள் ஒன்றாக இணைக்கப்படுகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பும் மஹாராஷ்டிரா மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை இரு கட்சிகளும் இணைக்கப்பட்டால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கும், பாஜகவிற்கும் சிக்கல் ஏற்படலாம்.

உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே

பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ராஜ் தாக்கரே. இவர் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக இருக்கிறார். பால் தாக்கரே - ஸ்ரீகாந்த் தாக்கரே ஆகியோர் ஒன்றாக இருந்தனர். ஆனால் அவர்களின் வாரிசுகளான உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே இடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார். சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கட்சியில் இருந்து வெளியேறிய ராஜ் தாக்கரே நவநிர்மான் சேனா என்ற கட்சியை தொடங்கி தலைவராக செயல்பட்டு வருகிறார். இருவரும் பெரியப்பா - சித்தப்பா மகன்கள் என்றாலும் கூட பகையின் காரணமாகக் குடும்ப விழாக்களில் கூட ஒன்றாக பங்கேற்பது இல்லை. 20 ஆண்டுகளாக இருவர் இடையேயும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.

ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மும்மொழி கொள்கையின் ஒருபகுதியாக இந்தி மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்தி கட்டாயம் என்பதன் மூலம் மராத்தி மொழி பாதிக்கப்படும் என்று போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து ஆளும் பாஜக அரசு அந்த கொள்கையில் இருந்து பின்வாங்கியது. இதனைத்தொடர்ந்து மும்பையில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ‘வாய்ஸ் ஆஃப் மராத்தி’ என்ற பேரணியை நடத்தியிருந்தனர். அதில் 20 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒன்றாக மேடை ஏறினர்.

அப்போது, அரங்கத்தில் இருந்த இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாக மிகுதியில் கோஷங்களை எழுப்பினர். விழாவில் பேசிய உத்தவ் தாக்கரே, “நானும் ராஜ் தாக்கரேவும் இனி ஒன்றிணைந்து செயல்படுவோம். மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிராவில் ஒன்றாக அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் ஒன்றிணைந்துள்ளோம். அரசாங்கம் எங்கள் மீது இந்தியைத் திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” என தெரிவித்திருந்தார்.

உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே
உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே

இதனைத் தொடர்ந்து பேசிய ராஜ் தாக்கரே , “ மாநில அரசு விதித்த மும்மொழிக் கொள்கை, மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்கும் திட்டத்திற்கு முதல்படி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் உத்தவ் தாக்கரேவும் அரசியல் மேடையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்தான். எங்களை ஒன்றிணைக்க பால் தாக்கரே எவ்வளவோ முயன்றார். அவரால்கூட முடியாததை தேவேந்திர ஃபட்னவிஸ் செய்துவிட்டார்.

மராத்தி மக்கள் காட்டிய வலுவான ஒற்றுமை காரணமாக மகாராஷ்டிரா அரசு மும்மொழிக் கொள்கை குறித்த முடிவைத் திரும்பப் பெற்றது. பால் தாக்கரே ஆங்கிலப் பள்ளியில் படித்தார், ஆங்கில செய்தித்தாளில் பணியாற்றினார், ஆனால் மராத்தி மொழிக்கான மரியாதை விஷயத்தில் அவர் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை.

தென்னிந்தியாவில் பல அரசியல்வாதிகளும், திரை நட்சத்திரங்களும் ஆங்கிலப் பள்ளிகளில் படித்தாலும் தங்கள் தாய் மொழியான தமிழ் மற்றும் தெலுங்கு மீது மிகுந்த பெருமையை கொண்டிருக்கிறார்கள்.” என பேசியிருக்கிறார்.

சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே தனியாக பிரித்து சென்றுவிட்டார். இதனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சியும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனால் இரு கட்சியினரும் பெரும் சோகத்தில் இருக்கின்றனர். விரைவில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

அமித்ஷா - ஏக்நாத் ஷிண்டே
அமித்ஷா - ஏக்நாத் ஷிண்டே

இந்த தேர்தலையொட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கட்டாயம் உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரேவிற்கு உள்ளது. மகாராஷ்டிராவை எடுத்து கொண்டால் தாக்கரேவின் குடும்பத்துக்கு என்று செல்வாக்கு இருக்கிறது. இப்படியான சூழலில் ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே ஆகியோர் இணைவது தாக்கரேவின் குடும்பத்திற்கு மீண்டும் செல்வாக்கு கூடும். கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஒரு புத்துணர்வைக் கொடுக்கும். இவர்களின் இணைப்பால் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு சிக்கல் ஏற்படலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

UP: 7-ம் வகுப்பு மாணவிக்கு யோகி ஆதித்யநாத் அளித்த நம்பிக்கை; மறுத்த பள்ளி நிர்வாகம் - என்ன நடந்தது?

பன்குரி திரிபாதி என்ற 7-ம் வகுப்பு மாணவி உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் தனது கல்விக்கு உதவி கேட்டது, அந்த மாநிலத்தில் அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. பன்குரியின் தந்தை ராஜீவ் குமார... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையத்தில் இ.பி.எஸ். விவசாயிகளின் குரலோடு தொடங்கிய பயணம்

நேற்று, ஜூலை 7, 2025 அன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் உற்சாகத்தோடு தொடங்கியது எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ’புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்’அதிமுக பொதுச் செயலாளரும், சட்... மேலும் பார்க்க

Secularism: `மதச்சார்பின்மையை நீக்க நினைக்கும் பாஜக' - என்ன தான் பிரச்னை? | ஓர் அலசல்

``சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற இரண்டு சொற்களை அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்த்ததன் மூலம் அரசியலமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. நாம் நடுநிலையாக இருந்தால், சத்திரங்களுக்கு (வைணவ மடங்கள... மேலும் பார்க்க

ட்ரம்ப் 15 நாடுகளுக்கு கடிதம்; `Just Miss' ஆன இந்தியா! இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தத்தின் நிலை என்ன?

ஏப்ரல் மாதம் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று, இப்போது மீண்டும் ஹெட்லைன்களில் இடம்பெற தொடங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 'பரஸ்பர வரி'யின் மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் நாளை அற... மேலும் பார்க்க

பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவு; அச்சத்தில் மக்கள் - காரணம் என்ன... அதிகாரிகள் ஆய்வு!

பெருங்குடி ரயில் நிலையம் அருகே, கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் பகுதியில் உள்ள சாலையின் நடுவே சுமார் 150 அடி நீளத்திற்கு நேற்று (ஜூலை 7) பிளவு ஏற்பட்டது.இது குறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி மற்றும் ந... மேலும் பார்க்க