கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
மேட்டுப்பாளையத்தில் இ.பி.எஸ். விவசாயிகளின் குரலோடு தொடங்கிய பயணம்
நேற்று, ஜூலை 7, 2025 அன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் உற்சாகத்தோடு தொடங்கியது எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ’புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்’
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) தனது சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை இங்கிருந்து ஆரம்பித்தார். “எந்தப் புதிய முயற்சியையும் இந்த அம்மனிடம் தொடங்கினால் வெற்றி கிடைக்கும்” என்று இப்பகுதி மக்கள் நம்புவதற்கு ஏற்ப, திமுக அரசை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் நல ஆட்சியை அமைக்கும் நோக்கத்தோடு இ.பி.எஸ். இந்தக் கோயிலைத் தேர்ந்தெடுத்தார்.

கோயிலில் சிறப்பு வரவேற்பு
காலை 9 மணி முதலே கோயிலுக்கு பக்தர்களும், கட்சியினரும் சாரை சாரையாக வந்து குவிந்தனர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், பா.வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ-க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், சிங்கை ஜெயராமன், மேட்டுப்பாளையம் ஏ.கே.சின்ராஜ், கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், சூலூர் கந்தசாமி, மாணவர் அணித் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
9.40 மணியளவில் இ.பி.எஸ். கோயிலுக்கு வந்ததும், பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க, பூங்கொத்துகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கள் சிலர் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆசி வாங்கிச் சென்றனர். மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்புடன் இந்தப் பயணத்தை இ.பி.எஸ். தொடங்கினார். வழிபாட்டை முடித்த பின், கோயில் பிராகாரத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
விவசாயிகளுடன் உரையாடல்
கோயில் நிகழ்ச்சிக்குப் பின், இ.பி.எஸ். அருகிலுள்ள அம்மை அப்பன் மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். விவசாயிகள், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவேற்றிய இ.பி.எஸ்ஸுக்கு நன்றி தெரிவித்து, இரண்டாம் கட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். “மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இருந்தும், இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த முடிவு செய்தோம். ஆயிரம் கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டது. ஆட்சி மாறியதால் தடைபட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்து இதை முடிப்போம்” என்று இ.பி.எஸ். உறுதியளித்தார்.
வனவிலங்கு பாதிப்பால் விவசாயிகள் துயரப்படுவதாகவும், ரயில் பாதைகளை அமைத்தால் இதைத் தடுக்கலாம் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்கு இ.பி.எஸ்., தம்பிதுரை, வேலுமணி ஆகியோர் முயற்சி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

செங்கல் உற்பத்தியாளர்களும், விறகு வியாபாரிகளும்
செங்கல் உற்பத்தியாளர்கள், “அதிமுக ஆட்சியில் கேட்டவுடன் உதவி கிடைத்தது. ஆனால், திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் வழக்கு போட்டு செங்கல் சூளைகளை மூடவைத்தனர். நான்கு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை. சட்டப்படி சூளைகளை இயக்க ஆவன செய்ய வேண்டும்,” என்று கோரினர்.
விறகு வியாபாரி ஒருவர், “செங்கல் உற்பத்தி நின்றதால் விறகு வியாபாரம் பாதிக்கப்பட்டு, மூன்று லட்சம் பேர் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கிறோம்,” என்று வேதனைப்பட்டார்.
“அதிமுக ஆட்சியில் மக்களுக்கு உதவி”
எஸ்.பி.வேலுமணி பேசும்போது, “இ.பி.எஸ். ஆட்சியில் விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்பட்டன. திமுக ஆட்சியில் ஒன்றுமே இல்லை. மீண்டும் இ.பி.எஸ். முதல்வராக வருவார். இந்தப் பயணம் கோவையில் தொடங்கியது மகிழ்ச்சி,” என்றார்.
இ.பி.எஸ். பேசும்போது, “6,000 ஏரிகளை தூர்வாரியது, சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 25% மானியம், இலவச மும்முனை மின்சாரம், வண்டல் மண் வழங்கல், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பசு ஆராய்ச்சி மையம் இவையெல்லாம் அதிமுக ஆட்சியின் சாதனைகள். அமெரிக்காவில் ஆய்வு செய்து, கலப்பின பசு உருவாக்கி பால் உற்பத்தியை அதிகப்படுத்தினோம். ஆடு, மீன், கோழி வளர்ப்புக்கு பயிற்சி அளித்தோம். பசுக்களை இலவசமாக வழங்கினோம். கால்நடைகளுக்கு நோய் முன்னெச்சரிக்கை மையம் அமைத்தோம்.
திமுக ஆட்சியில் மின் கட்டணம் நான்கு முறை உயர்ந்தது. வனவிலங்கு பாதிப்புக்கு உடனடி இழப்பீடு வழங்கியது அதிமுக. பசுமை வீடு, கேரளாவுடன் நீர் பிரச்சினைக்குத் தீர்வு, 11,500 கோடி மதிப்பில் நீர் சுத்திகரிப்பு திட்டம் இவை எல்லாம் அதிமுக ஆட்சியில் நடந்தவை. திமுக இவற்றைத் தொடரவில்லை,” என்றார்.
“நானும் ஒரு விவசாயி. இப்போதும் விவசாயம் செய்கிறேன். பயிர்களை ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போல பாதுகாக்கிறோம்,” என்றார். மேலும், “ஆட்சிக்கு வந்தவுடன் செங்கல் சூளைகளை மீண்டும் இயக்குவோம். விவசாயிகளின் குறைகளை நீக்குவோம். வனவிலங்கு பாதிப்பைத் தடுப்போம்,” என்று உறுதி கூறி, மேட்டுப்பாளையத்தில் நம்பிக்கையை விதைத்தார் எடப்பாடி கே. பழனிசாமி.