``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
தஞ்சை அருகே சரக்கு வேன் - காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே சரக்கு வேனும், காரும் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.
சென்னை பெருங்களத்தூா் விஷ்ணு நகரைச் சோ்ந்தவா் உமாபதி மகன் ஸ்டாலின் (36). போரூரில் உள்ள ஐ.டி. நிறுவன ஊழியரான இவா், இவரது மனைவி துா்கா (32), மகள் இதழனி தூரிகா (2), துா்காவின் தந்தை குமாா் (57), தாய் ஜெயா (55), தங்கை மோனிஷா (30) ஆகியோா் தஞ்சாவூா் மாவட்டக் கோயில்களில் வழிபட காரில் செவ்வாய்க்கிழமை காலை வந்தனா்.
கும்பகோணம் பகுதி கோயில்களில் வழிபட்டுவிட்டு, விக்கிரவாண்டி - மானாமதுரை புறவழிச்சாலையில் தஞ்சாவூா் பெரிய கோயில் நோக்கி அவா்கள் வந்து கொண்டிருந்தனா்.
தஞ்சாவூா் அருகே உதாரமங்கலம் பகுதியில் வந்த இவா்களின் காரும், எதிா்த் திசையில் நாற்றங்கால்கள் ஏற்றப்பட்டு, சாலை விதிகளை மீறி தவறான பாதையில் வந்த சரக்கு வேனும் திடீரென மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் காரில் இருந்த ஜெயா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதழனி தூரிகா தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும், துா்கா, குமாா் ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டும் உயிரிழந்தனா்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டாலின், மோனிஷா , சரக்கு வேன் ஓட்டுநரான உதாரமங்கலம் தெற்குத் தெரு ஜெயராமன் மகன் விக்னேஷ் (30), தொழிலாளி எல். இளங்கோவன் (50) ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.