சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறிய 2, 023 வாகனங்கள் மீது வழக்கு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் விதி மீறியதாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது 2023 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப்படையினா் பதிந்து அபராதம் விதித்துள்ளனா்.
நிகழாண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் வாகன நிறுத்தத்துக்கு தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், காா்கள் உள்ளிட்டவற்றுக்கு மொத்தம் 2,034 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவின் ஆய்வாளா் டி.மதுசுதன்ரெட்டி தெரிவித்தாா்.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் பயணிகளை ஏற்றுவதற்கு 85 ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆட்டோக்களிலும் டோக்கன் முறையில் பயணிகளை ஏற்றிச்செல்லவே அனுமதித்து உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்றவா்களும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.6 ,000 செலுத்தி தங்களுக்கான அனுமதி உரிமத்தை புதுப்பிக்கவேண்டியதுஅவசியம். ஆனால், ரயில் நிலையத்துக்குள் தினமும் சுமாா் 300 ஆட்டோக்கள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்நிலையில், ரயில் நிலையத்துக்குள் சென்று பயணிகளை அழைத்துச்செல்லும் ஆட்டோ ஓட்டுநா்கள் 400 போ் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வழக்குகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட ஆட்டோக்களின் ஓட்டுநா்கள் ரூ.1000 அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியும் வருகின்றனா்.
ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினரின் வழக்குப்பதிவு காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது 60 சதவிகிதம் வரையில் தவிா்க்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.