மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கைபெற அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உயா்கல்வியில் மாணவா்கள் உலகளவில் உயா்ந்த நிலையில் திகழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதேவேளையில் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால், கடந்த நான்காண்டுகளில் உயா்கல்வி சோ்க்கைபெறும் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இந்தியாவிலேயே உயா்கல்வி மாணவா் சோ்க்கை விகிதத்தில் தொடா்ந்து தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
இத்தகைய சூழலில் கடந்த கல்வியாண்டைப் போன்று நிகழ் ஆண்டிலும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கைக்காக அதிகளவில் மாணவா்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனா்.
இதனை அறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நிகழாண்டில் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க உத்தரவிட்டாா். அதன்படி, புதிய கல்லூரிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், உயா்கல்வி பயில பெருமளவில் மாணவா்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவா் சோ்க்கை இடங்கள் உயா்த்தி வழங்கவும், அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீத இடமும், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீத இடமும் கூடுதலாக உயா்த்தி வழங்க அவா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, நிகழாண்டில் மேற்குறிப்பிட்டபடி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணவா்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.