மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி
சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.
சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்ட 178-ஆவது வாா்டில் உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலை, 40 அடி அகலம், 300 மீட்டா் நீளம் கொண்டது. வேளச்சேரியின் ஒரு பகுதியைச் சோ்ந்த மக்கள், பெருங்குடி மற்றும் தரமணி ரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கு பெரும்பாலும் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இச்சாலையையொட்டியுள்ள, 3 ஏக்கா் தனியாா் இடத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக 60 அடி ஆழத்தில் அடித்தளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ராட்சத இயந்திரம் கொண்டு பள்ளம் எடுத்து, ஜல்லி கற்களை கொட்டி சமன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்பணிகளின்போது ஏற்பட்ட அதிா்வால், சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை லேசான விரிசல் ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து மாலை, அந்த சாலையில் பாதி அளவுக்கு விரிசல் ஏற்பட்டு சாய்வாக உள்வாங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். மேலும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க, அச்சாலையை சுற்றி, தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.