புதுகை மாநகர திமுக பொறுப்பாளா் நியமனப் பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு: அமைச்...
Marakkaar Biryani: கிளைகள் தருவதாக 239 பேரிடம் ரூ.25 கோடி வசூல்.. மோசடி புகாரில் உரிமையாளர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் விரிவாக்கம் மகிழம்பூ நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் மகன் கங்காதரன் என்பவர் ட்ரூல் டோர் (கனவு காணுங்கள்) என்ற நிறுவனத்தின் கீழ் மரக்கார் பிரியாணி கடை மூலம் கிளைகள் அமைப்பதற்கும், அந்தக் கிளையில் நடக்கும் வியாபாரத்திற்கு ஏற்றார் போல் 10% கமிஷன் தருவதாகவும், கடைக்கு உண்டான வாடகை, வேலை ஆட்கள் நாங்களே வழங்குகின்றோம் என்று சின்னத்திரை நடிகர்களை வைத்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து கங்காதரனை தொடர்பு கொண்ட 239 நபருக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.25 கோடிக்கு மேலாக வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கங்காதரன் மற்றும் அவரது மனைவி தேவதாஸ் மரியநாயகம், அருப்புக்கோட்டையை சேர்ந்த நிர்வாக இயக்குநர் ராம்குமார், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம், திருமங்கலம் கப்பலூர் சதீஷ்குமார் மற்றும் ராணிப்பேட்டை சீக்கராஜபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்ற ஏ.சி. பிரவீன் ராவ் இவர்கள் கூட்டாக சதி செய்து ஐந்து மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏஜெண்டுகள் தேர்வு செய்து சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் நூதன மோசடி செய்தாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 239 பேரும் மரக்கார் பிரியாணி கிளை துவங்க 5 லட்சத்து 18 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்து, இதற்கு உண்டான கடை தாங்களே தயார் செய்து வைத்துள்ளனர். இந்த கிளைக்கான ஒப்பந்தத்தை 100 ரூபாய் பத்திரத்தில் 239 பேருக்கும் கங்காதரன் கையெழுத்திட்டு வழங்கியிருக்கிறார்.

முதற்கட்டமாக 21 கடைகளை மட்டும் திறந்து வைத்து வியாபாரத்தை தொடங்கிய சில மாதத்திலேயே அந்த கடைகளுக்கான எந்த ஒரு நிதிப்பங்கும் வழங்காத நிலையில் கடையின் உரிமையாளர்கள் கடை நடத்த முடியாமல் கடையை மூடியுள்ளனர்.
மற்றும் உள்ள 228 பேருக்கு கடை தொடங்குவதற்கான எந்த ஒரு பணியையும் கங்காதரன் செய்யவில்லை என பணம் வழங்கிய கிளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
கங்காதரனை தொடர்பு கொண்டு தாமதத்திற்கான காரணத்தை அறிய முற்பட்டபோது பதிலும் அளிக்காமல் பணத்தையும் திருப்பி அளிக்காமல் இழுத்தடித்ததாகவும், பல காரணங்களை கூறியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பின் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கிளை உரிமையாளர்கள் அந்தந்த காவல் நிலையங்களிலேயே புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகர் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவில் குற்றவழக்கு பதியப்பட்டு ஜூன் 20 அன்று பிரவீன் ராவ், சதீஷ்குமார், சண்முகசுந்தரம் ஆகியோர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் முன்னரே கங்காதரனின் மனைவி தேவதாஸ் மரியநாயகம் சரணடைந்த நிலையில், இன்று காலை கங்காதரன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
தற்போது கங்காதரனிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தபடியாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து மோசடிக்கான காரணங்களையும் பணத்தை திரும்பி பெறுவதற்கான வழியையும் காவல்துறை மேற்கொள்ளும் என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கிளை துவங்குவதற்காக பணம் கட்டி பாதிக்கப்பட்ட நாகூரைச் சேர்ந்த பகுருதீன் கூறுகையில், “பிரியாணி கடையில் செய்த மோசடியை விட பெரிய மோசடியை செய்வதற்கு கங்காதரன் மற்றும் அவரது குழுவினர்கள் தயாராகி வருகின்றனர். மரக்கார் பிரியாணி தலைமை அலுவலகத்தில் கிச்சன் ஒன்று இருக்கிறது. அதில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளுக்கான விளம்பரங்கள் உள்ளது. எடுத்துக்காட்டாக தற்போது கேத்தல் காபி, வந்தனம் காபி போன்ற சில கிளைகளை துவங்கியுள்ளனர்.
இதற்கிடையில், பிரியாணி கடையில் பிரச்னை ஏற்பட்டதால் இந்த கிளைகளை துவங்குவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்களைப் போன்றவர்கள் இவர்களிடம் கிளை அமைத்து தருவதற்காக பணம் தந்து ஏமாற வேண்டாம் எனவும், காவல்துறை விரைந்து இவர்களிடமிருந்து எங்களது பணத்தை மீட்டுத் தரவும் நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்” என்றார்.