Mamitha Baiju: `விஜய், சூர்யா, நிவின் பாலி, பிரதீப் ரங்கநாதன்' - சென்சேஷன் மமிதா பைஜுவின் லைன் அப்!
நடிகை மமிதா பைஜு தான் தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன். அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கமிட்டாகி, பட்டாம்பூச்சியாய் படப்பிடிப்புகளுக்கு பறந்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ப்ரேமலு திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து, மமிதா பைஜுவை பலருக்கும் பேவரைட்டாக்கியது.

இத்திரைப்படம் வெளியான அடுத்த சில மாதங்களிலேயே பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கிவிட்டார்.
தற்போது மமிதா பைஜுவின் லைன் அப்பில் இருக்கும் படங்களின் விவரங்களைப் பார்ப்போமா...
மலையாளத்தில் 'சூப்பர் சரண்யா', 'ப்ரணய விலாசம்' ஆகிய ஹிட் படங்களில் நடித்த மமிதா பைஜு, தமிழ் சினிமாவில் ரெபெல் படத்தின் மூலம் தடம் பதித்தார். மமிதா பைஜு நடிப்பில் தமிழில் இதுவரை ஒரேயொரு திரைப்படம் தான் வெளியாகியிருக்கிறது.
ஆனால், அதற்குள் நான்கிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் இரண்டாவதாக மமிதா பைஜு கமிட்டான திரைப்படம் 'இரண்டு வானம்'. விஷ்ணு விஷாலுடன் மமிதா பைஜு இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.
'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்குப் பிறகு, தமிழில் விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கேரளத்துக்கு மக்களுக்கு விஜய்யின் திரைப்படங்கள் எப்போதுமே நெருக்கமானது. கேரளாவிலும் விஜய்க்கு கணிசமான எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அப்படி மமிதா பைஜூவும் விஜய்யின் தீவிர ரசிகர். 'ஜனநாயகன்' படத்தின் பூஜை சமயத்திலும் விஜய்யுடன் அத்தனை மகிழ்வுடன் நின்று புகைப்படம் எடுத்திருப்பார்.
இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புகளில் தற்போது அவர் பங்கேற்று வருகிறார் மமிதா. இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அவர் ப்ரதீப் ரங்கநாதனுடன் 'டியூட்' படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தில் குரல் என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார் மமிதா.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது தமிழ் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இந்தாண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

இதை தாண்டி சூர்யாவுடன் அவருடைய 46-வது படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் மமிதா. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் அப்படத்தை டோலிவுட் தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கிறார்.
பாலா இயக்கத்தில் சூர்யா 'வணங்கான்' படத்தில் முதலில் நடித்தபோது அதில் மமிதாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிறகு, அத்திரைப்படம் கைவிடப்பட்டது. இப்போது சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு மமிதாவுக்குக் கிடைத்திருக்கிறது.
இப்படங்களெல்லாம் அவர் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படங்கள். இதையும் தாண்டி இன்னும் சில தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுவாகப் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் மட்டுமில்லை மலையாளத்திலும் தற்போது புதிய இன்னிங்ஸை தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார் மமிதா. 'ப்ரேமலு' படத்தின் மூலம் மமிதாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்த இயக்குநர் கிரீஷ் ஏ.டி அடுத்ததாக இயக்கும் 'பெத்லெஹெம் குடும்ப யூனிட்' என்ற படத்தில் இவர் நடிக்கிறார்.
படத்தில் கதாநாயகனாக நிவின் பாலி நடிக்க ஃபகத் பாசில், ஷ்யாம் புஷ்கரன், திலீஷ் போத்தன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அதுபோல, மமிதா - நஸ்லென் கூட்டணியில் எப்போது 'ப்ரேமலு 2' வெளியாகும் என ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர்.

ஆனால், சில காரணங்களால் 'ப்ரேமலு 2' படத்தை இப்போது வரை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதுபோல, 'ப்ரேமலு' படத்தில் அமல் டேவிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நமக்கு பரிச்சயமானவர் நடிகர் சங்கீத் ப்ரதாப்.
இவரும் மமிதா பைஜூவும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல் அவர்களை சமூக வலைதளப் பக்கங்களில் பின்தொடர்பவர்களுக்கு தெரிந்ததே.
இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.
இதில் எந்த திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்!