Rashmika: 'ராஷ்மிகா சொல்வதால் அது உண்மையாகிவிடாது!' - ராஷ்மிகாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் 'குபேரா' திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ரிலீஸை முடித்த உடனே தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வேலைகளுக்கு நகர்ந்துவிட்டார் ராஷ்மிகா.
தற்போது, ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா மந்தனா, "எங்களுடைய கொடவா சமூகத்திலிருந்து எனக்கு முன் சினிமாவிற்குள் யாரும் வந்ததில்லை.
எங்கள் சமூகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் நபர் நான்தான் என நினைக்கிறேன்." எனக் கூறியிருந்தார். ராஷ்மிகாவின் இந்தக் கருத்துக்கு கொடவா சமூகத்தைச் சேர்ந்த நடிகர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராஷ்மிகா பேசிய விஷயத்திற்கு நடிகை பிரேமா அவரை விமர்சித்திருக்கிறார். நடிகை பிரேமா பேசுகையில், "கொடவா சமூகத்திலிருந்து சினிமாத் துறைக்குள் வந்த நடிகர்களின் உண்மையான விவரங்கள் கொடவா சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு தெரியும். இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
ராஷ்மிகாவிடம்தான் அவர் கூறிய கருத்திற்கு விளக்கத்தைக் கேட்க வேண்டும். எனக்கு முன்பே, கொடவா சமூகத்தைச் சேர்ந்த நடிகை சசிகலா சினிமாவிற்குள் வந்துவிட்டார். அதன் பிறகுதான் நான் சினிமாவிற்குள் வந்தேன்.

அதனைத் தொடர்ந்து கொடவா சமூகத்தைச் சேர்ந்த பலரும் சினிமாவிற்குள் வந்து சோபித்திருக்கிறார்கள்." என்றார். இவரைத் தொடர்ந்து மாடல் மற்றும் கன்னட சினிமாவின் நடிகையுமான நிதி சுப்பையா, "ராஷ்மிகா சொல்வது ஜோக் போல இருக்கிறது. அவர் அப்படியான கருத்தை வைத்ததாலேயே அது உண்மையாகிவிடாது.
இதனை மிகப் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ராஷ்மிகா சினிமாவில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நடிகை பிரேமா கொடவா சமூகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார். இருப்பினும், ராஷ்மிகா ஏன் அப்படியான கருத்தைச் சொன்னார் எனத் தெரியவில்லை." எனத் தெரிவித்திருக்கிறார்.