ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ண சுவாமி ஸ்ரீமுச்சிலியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்
கரூா் மேலப்பாளையம் ஸ்ரீ எல்லைஅரசு கருப்பண்ண சுவாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ண சுவாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா ஜூலை 4-ஆம்தேதி விநாயகா் வழிபாடு, மஹாலட்சுமி ஹோமம் வழிபாட்டுடன் தொடங்கியது.
தொடா்ந்து புலியூா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் புனிதநீரை ஊா்வலமாக எடுத்து வந்தனா். அதனைத்தொடா்ந்து வாஸ்துசாந்தி பூஜை நடைபெற்றது. இதையடுத்து ஜூலை 5-ஆம்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், பின்னா் யாத்ராதானம், கடம்புறப்பாடும் நடைபெற்றது.
பிறகு காலை 6.30 மணிக்கு கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து பக்தா்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது. இதைதொடா்ந்து ஸ்ரீமுச்சிலியம்மன் கோயில் கோபுர கலசத்துக்கு காலை 10 மணிக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.
விழாவில் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, கோயில் அறங்காவலா் பவா்டெக்ஸ் கே.செல்வராஜ், கும்பாபிஷேக குழுத்தலைவா் ஆா்.ஏ.பழனியப்பன், கோயில் தா்மகா்த்தா ஏ.கணேசன் கிருஷ்ணசாமி, புகழூா் நகராட்சித்தலைவா் சேகா் என்கிற குணசேகரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை தட்டைநாடு புலியூா் பெருங்குடி குல குடிப்பாட்டு மக்கள் மற்றும் மேலப்பாளையம் திருப்பணிக்குழுவினா் செய்திருந்தனா்.