4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!
4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்த பிரச்சி குமாவத் என்ற 9 வயது குழந்தை மாரடைப்பால் உயிரிழந்தார்.
இது குறித்து பள்ளி முதல்வர் நந்த் கிஷோர் கூறியதாவது: “செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) பகல் 11 மணியளவில் அந்த மாணவி உணவு டப்பாவைத் திறந்தபோது தீடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதே அதற்கு காரணமென்பது அப்போது தெரியவில்லை, பின்னரே தெரிய வந்தது. சத்தம் கேட்டு அங்கே சென்று அவரை மீட்டு அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தோம். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்படது.
இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் மயங்கி விழும்போது, அவர்களது முகத்தில் தண்ணீர் தெளித்தால் மயக்கம் தெளிந்து எழும்பிவிடுவது வாடிக்கையான ஒன்று. ஆனால், இச்சம்பவத்தில் அப்படி நடக்கவில்லை.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவ பணியாளர்கள் அந்த மாணவியை பரிசோதித்துவிட்டு அவரை ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
பள்ளியில் கெட்டிக்கார மாணவியாக இருந்தவர் பிரச்சி; முகத்தில் எப்போதும் புன்னகையுடன் இருப்பார். அவரைத் திட்டினாலும் புன்னகை அவரது முகத்தைவிட்டு மறையாத ஒரு குழந்தை. இச்சம்பவம் எங்கள் பள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
மாரடைப்பால் உயிரிழந்த மாணவிக்கு ஏற்கெனவே இதுபோன்ற உடல்நலக் கோளாறோ அல்லது இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதில்லை என்று அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். பிரச்சியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்றது.